கோலாலம்பூர்:
மலேசியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர் (SME) துறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல, 2027-ஆம் ஆண்டில் SCALE எனும் புதிய செயல் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவித்துள்ளார்.
பினாங்கில் இன்று நடைபெற்ற SAMENTA அமைப்பின் SME CEO Forum நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 2026-ஆம் ஆண்டு தொழில்முனைவோர் துறையின் அடிப்படைத் தேவைகளையும் நிதி ஆதரவையும் உறுதிப்படுத்தும் ஆண்டாக இருந்த நிலையில், 2027-ஆம் ஆண்டு வளர்ச்சியையும் விரிவாக்கத்தையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
SCALE செயல் திட்டம் ஐந்து முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. அவை, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வரையறையை மறுசீரமைத்தல் (SME redefinition), பணப்புழக்கத்தைப் பாதுகாத்தல் (Cash flow protection), செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த ஊக்குவித்தல் (AI for SMEs), உள்நாட்டு உள்ளடக்கத் தேவைகளை வலுப்படுத்துதல் (Local content requirement) மற்றும் நிறுவனங்களுக்கான நிதியுதவியை எளிதாக்குதல் (Ease of SME financing) ஆகியவையாகும்.
தற்போது பயன்படுத்தப்படும் SME வரையறை 2013-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், மாறிவரும் தொழில்நுட்பச் சூழலுக்கும் தற்போதைய வணிக நிலவரங்களுக்கும் ஏற்ப அதனை மறுசீரமைக்கும் பணியை அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பெரிய நிறுவனங்களிடமிருந்து தாமதமாகக் கிடைக்கும் கொடுப்பனவுகள் மற்றும் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்படும் தொகைகள் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பணப்புழக்கத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் மூலம், கூடுதல் வேலை நேரத்தைச் செலவிடாமல் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும் எனக் குறிப்பிட்ட அவர், நுண் தொழில்கள் முதல் நடுத்தர நிறுவனங்கள் வரை தங்களின் வணிகச் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் உதவும் என்றும் கூறினார்.
அதேவேளை, நாட்டில் அதிகரிக்கும் முதலீடுகளின் பலன்கள் உள்நாட்டு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் சென்றடைவதை உறுதிசெய்ய, உள்நாட்டு உள்ளடக்கத் தேவைகளை வழிகாட்டுதல்கள் அல்லது தேவைப்பட்டால் சட்டங்கள் மூலமாக வலுப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றார்.
2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் SME துறைக்கான ஒதுக்கீடு இதுவரை இல்லாத அளவுக்கு RM67.9 பில்லியனாக உயர்ந்துள்ளதாகவும், இதில் நிதியுதவி மற்றும் உத்தரவாதங்களுக்கான ஒதுக்கீடு RM57 பில்லியன் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2027-ஆம் ஆண்டில் SME நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்படுவதுடன், அண்மைய குறைந்தபட்ச ஊதிய உயர்விலிருந்து SME துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2026-ஆம் ஆண்டு தொழில்முனைவோர் துறை நிலைத்திருக்க உதவும் ஆண்டாக இருந்த நிலையில், 2027-ஆம் ஆண்டு நிறுவனங்கள் வளரவும் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் ஏற்ற ஆண்டாக அமைய வேண்டும் என வலியுறுத்திய ஸ்டீவன் சிம், இதற்கு அரசாங்கத்தின் ஆதரவுடன் தொழில்துறையினரும் தங்களின் செயல்பாடுகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

