Site icon அநேகன்

KTMB அறிமுகப்படுத்தும் Hat Yai செல்லும் MySawasdee சொகுசு ரயில் சேவை; 50 விழுக்காடு வரை கட்டணச் சலுகை

கோலாலம்பூர்:

மலேசிய ரயில்வே நிறுவனமான KTMB, கோலாலம்பூர் சென்ட்ரல் – Hat Yai – கோலாலம்பூர் சென்ட்ரல் வழித்தடத்தில் MySawasdee சிறப்பு ரயில் சேவையின் கீழ் புதிய எக்ஸிகியூட்டிவ் வகுப்புப் பயண வசதியை அக்டோபர் 23ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்துகிறது.

KTM Charter Train சேவையின் கீழ் வழங்கப்படும் இந்தப் புதிய வசதியில், 14 இருக்கைகளை முழுமையாகப் படுக்கையாக மாற்றிக்கொள்ள முடியும். நீண்ட தூரப் பயணங்களின்போது கூடுதல் வசதியை வழங்கும் வகையில், மூன்று முறை உணவு மற்றும் சிற்றுண்டி, இலவசப் பானங்கள், Wi-Fi, தலையணை, போர்வை மற்றும் தனிப்பட்ட வாசிப்பு விளக்குகள் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிமுகத்தை முன்னிட்டு, AXC50 என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தி 50 விழுக்காடு கட்டணத் தள்ளுபடியைப் பெறலாம். இதன் மூலம், ஒரு வழிப் பயணத்திற்கான வழக்கமான RM750 கட்டணம் RM375ஆகக் குறைக்கப்படுகிறது.

இந்தச் சலுகை மலேசியக் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் இருவருக்கும் பொருந்தும். 2026 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பயணத் தேதிகளுக்கான பெரியவர்களின் ஒரு வழி அல்லது இருவழிப் பயணச் சீட்டுகளை வாங்கும்போது இந்தச் சலுகையைப் பயன்படுத்தலாம்.

மேலும், பயணிகள் கோலாலம்பூர் சென்ட்ரலில் உள்ள Ruby Lounge வசதியைப் பயன்படுத்துவதுடன், ரயிலில் முன்னுரிமையாக ஏறுதல் மற்றும் மலேசியா – தாய்லாந்து இடையிலான குடிநுழைவு நடைமுறைகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட வசதிகளையும் பெறலாம்.

2022 செப்டம்பர் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட MySawasdee சேவை, 2026 செப்டம்பர் 28ஆம் தேதி நிலவரப்படி 32,925க்கும் மேற்பட்ட பயணிகளுக்குச் சேவை வழங்கியுள்ளது.

பயணச் சீட்டுகளை KTMB Mobile செயலி, KITS Style, KTMB-யின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மற்றும் சீட்டு விற்பனை இயந்திரங்கள் மூலம் வாங்கலாம். இந்தச் சலுகை குறிப்பிட்ட பயணத் தேதிகளுக்கு மட்டுமே பொருந்தும். சலுகைச் சீட்டுகளைத் திருப்பிக் கொடுக்க முடியாது. மேலும், கூடுதல் உணவு, பானங்கள் மற்றும் சுற்றுலாப் பயணத் தொகுப்புகளுக்கான கட்டணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

Exit mobile version