Site icon அநேகன்

30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்காக உழைத்தவர்களின் பங்களிப்பு விலைமதிப்பற்றது;‘கெசுமா’ குடும்பத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் – டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர், அக். 22:

நாட்டின் வளர்ச்சிக்கும் தொழிலாளர் நலனுக்கும் தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த மனிதவள அமைச்சகத்தின் (கெசுமா) மூத்த, ஓய்வுபெற்ற ஊழியர்களின் சேவைகளை ஒருபோதும் மறந்துவிட முடியாது என்று மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மனிதவள அமைச்சகத்தின் சார்பில் கோலாலம்பூரில் உள்ள பார்க் ரோயல் கலெக்‌ஷன் ஹோட்டலில் நடைபெற்ற சிறப்புப் பாராட்டு விழாவில் உரையாற்றிய அவர், அமைச்சகத்தின் வளர்ச்சிக்கும் அதன் செயல்பாடுகளுக்கும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் ஆற்றிய பங்களிப்புகள் என்றும் நினைவுகூரத்தக்கவை என்றார்.

இவ்விழாவில் கெசுமாவிலிருந்து ஓய்வுபெற்ற சுமார் 170 ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களில் 60-க்கும் மேற்பட்டோர் விழாவில் நேரடியாகப் பங்கேற்று தங்களுக்கான பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டனர்.

குறிப்பாக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பணியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களின் பங்களிப்பைப் பணத்தால் மதிப்பிட முடியாது என்று குறிப்பிட்ட ரமணன், அவர்களின் கடின உழைப்பும் தியாகமும் அடுத்த தலைமுறை ஊழியர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் என்றார்.

“இன்று ஓய்வுபெற்ற எங்கள் ஊழியர்களின் சேவைகளைக் கௌரவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அவர்கள் அமைச்சகத்திற்காக வழங்கிய பங்களிப்புகளுக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். துணை அமைச்சர், அமைச்சின் தலைமைச் செயலாளர், துணைத் தலைமைச் செயலாளர்களுடன் இணைந்து நாங்களும் அவர்களை நிச்சயமாக நினைவு கூர்வோம்.

“ஆனால், அவர்கள் ஓய்வுபெற்றுவிட்டார்கள் என்பதற்காக கெசுமா குடும்பத்திலிருந்து விலகிவிட்டார்கள் என்று அர்த்தமல்ல. இந்த அமைச்சகத்தின் கதவுகள் அவர்களுக்காக எப்போதும் திறந்திருக்கும். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம். அவர்கள் என்றும் எங்கள் குடும்பத்தின் ஓர் அங்கம்தான்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதற்கிடையில், நாட்டில் உள்ள 17.34 மில்லியன் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுமே தனது முதன்மையான பொறுப்பு என்றும் ரமணன் வலியுறுத்தினார்.

தொழிலாளர்களின் நலன் சார்ந்த விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நிலையில், தேவையற்ற அரசியல் சர்ச்சைகளில் நேரத்தைச் செலவிட விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஓய்வுபெற்ற ஊழியர்களின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் இவ்விழைவு, அரசுப் பணியில் பல ஆண்டுகளாகத் தங்களை அர்ப்பணித்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதுடன், கெசுமா குடும்பத்தின் ஒற்றுமையையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

Exit mobile version