கோலாலம்பூர்:
மலேசியாவில் தொடங்கப்பட்ட இந்தியத் திருமணத் தளமான டும் டும் மேட்ரிமோனி (Dum Dum Matrimony), தனது சேவையை முதலில் வீட்டிலிருந்தே சிறு முயற்சியாக தொடங்கி, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மலேசிய சாதனைப் புத்தகத்தால் (Malaysia Book of Records) “மிகப்பெரிய இந்தியத் திருமணத் தளம்” (Largest Indian Matrimony Platform) என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு போஷினி தேவியால் தோற்றுவிக்கப்பட்ட இச்சேவை, தொடக்கத்தில் அவரே சுயமாக வாட்ஸ்அப் வழியாகக் நிர்வகிக்கப்பட்ட அறிமுகங்களின் மூலம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பொருத்தமான வாழ்க்கைத் துணையைக் கண்டறிய உதவியது.
பதிவுகளின் எண்ணிக்கை 1,000ஐக் கடந்தபோது, வயது, கல்வி, தொழில், இருப்பிடம், குடும்பப் பின்னணி உள்ளிட்ட தனிப்பட்ட விருப்பங்களையும் சுயவிவரங்களையும் நிர்வகிப்பது பெரும் சவாலாக மாறியது. இதனையடுத்து, இச்சேவை 2023இல் இணையத் தளத்திற்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து 2025இல் கைப்பேசிச் செயலியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
“குடும்பங்கள் எதிர்பார்க்கும் நம்பிக்கையையும் தனியுரிமையையும், தகவல்களையும் பேணிக்காக்கும் அதே வேளையில், வாழ்க்கைத் துணையைக் கண்டறிவதை மேலும் எளிதாக்கும் நிலையான திருமணத் தளத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்,” என்றும் போஷினி தேவி கூறினார்.
டும் டும் மேட்ரிமோனியில் தற்போது 12,000க்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவு செய்துள்ளனர். இதன் வழி 1,000க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
திருமணமாகாதவர்கள், விவாகரத்து பெற்றவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள் உட்பட, வாழ்க்கைத் துணையைத் தேடும் மலேசிய, சிங்கப்பூர் குடிமக்களுக்கு இத்தளம் சேவையாற்றுகிறது. பல பெற்றோர்களும் உடன்பிறப்புகளும் தங்கள் அன்புக்குரியவர்களின் சார்பாகவும் பதிவு செய்து சுயவிவரங்களை நிர்வகிக்கின்றனர். இது திருமணப் பயணத்தில் குடும்பங்கள் தொடர்ந்து வகிக்கும் முக்கியப் பங்கைப் பிரதிபலிக்கிறது.
போஷினியின் சொந்தப் பயணமே நிறுவனத்தின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. உயிரித்தொழில்நுட்பப் பட்டதாரியான அவர், சமூகத்தின் உண்மையான தேவையை அடிப்படையாகக் கொண்டு ஒரு தீர்வை உருவாக்கியதன் மூலம் தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பத் துறைக்குள் அடியெடுத்து வைத்தார்.
டும் டும் மேட்ரிமோனி வளர்ச்சி கண்டபோது, தற்போது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றும் அவரது கணவர் தி. சத்தியவர்மன் அவருக்குத் துணை நின்றார். இருவரும் இணைந்து தொடங்கிய இம்முயற்சியை மேலும் கட்டமைக்கப்பட்ட, தொழில்நுட்பம் சார்ந்த வணிகமாக மாற்றியதோடு, அதன் செயல்பாடுகள், மின்னிலக்க இருப்பு, நீண்டகால வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றையும் வலுப்படுத்தினர்.
டேட்டிங் அல்லாமல் திருமணத்தையே மையமாகக் கொண்டிருப்பது டும் டும் மேட்ரிமோனியின் தனித்துவ அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். திருமணத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு, தீவிரமாக வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்களுக்காகவே இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனியுரிமையும் பயனர் கட்டுப்பாடும் இத்தளத்தின் மையக் கூறுகளாகும். சுயபட சரிபார்ப்பு, அடையாளச் சரிபார்ப்பு, தொலைபேசி எண் சரிபார்ப்பு, மின்னஞ்சல் சரிபார்ப்பு, சுயவிவர அணுகல் கட்டுப்பாடுகள், தனியுரிமை அமைப்புகள் போன்ற நடவடிக்கைகளை டும் டும் மேட்ரிமோனி கொண்டுள்ளது.
பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்பயன்பாட்டிற்காக வேறு எந்தத் தனிநபர்களுடனோ, வணிகங்களுடனோ, மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடனோ இந்நிறுவனம் விற்பனை செய்வதோ பகிர்வதோ இல்லை. தனியுரிமைக்கும் இரகசியத்தன்மைக்கும் வலுவான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பயனர் தகவல்கள் தளத்திற்குள்ளேயே கையாளப்படுகின்றன. இந்த உறுதிப்பாடு, தங்கள் அன்புக்குரியவர்களுக்காகச் சுயவிவரங்களை நிர்வகிக்கும் பெற்றோர்கள், உடன்பிறப்புகள் உட்படக் குடும்பங்களிடையே நம்பிக்கையை வளர்க்க உதவியுள்ளது.
வீட்டில் தொடங்கிய டும் டும் மேட்ரிமோனி, இன்று கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள அலுவலகத்திலிருந்து 10க்கும் மேற்பட்ட முக்கியப் பணியாளர்களின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. மலேசிய அரசாங்க நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், சமூக அமைப்புகள், உத்திசார் பங்காளிகள் ஆகியோரிடமிருந்து கிடைத்த ஆதரவும் ஊக்கமும் அதன் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்த்துள்ளன.
மலேசிய சாதனைப் புத்தகத்தின் இந்த அங்கீகாரம் நிறுவனத்தின் முக்கியமான புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.
மலேசியாவில் தனது இருப்பை நிலைநிறுத்தி, சிங்கப்பூரர்களுக்கும் சேவையை விரிவுபடுத்தியுள்ள டும் டும் மேட்ரிமோனிக்கு, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள சமூகங்களிடமிருந்தும் விசாரிப்புகள் வந்துள்ளன.
எல்லைகளைக் கடந்து இந்தியச் சமூகங்களை இணைக்கும், மலேசியாவில் பிறந்த திருமணத் தள வணிகச் சின்னத்தை உருவாக்கும் இலக்குடன், இச்சந்தைகளைப் படிப்படியாக ஆராய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டும் டும் மேட்ரிமோனியைப் பொறுத்தவரை, இந்த அங்கீகாரம் வெறும் சாதனையை எட்டியதைப் பற்றியது மட்டுமல்ல.
ஆயிரக்கணக்கான தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் நம்பிக்கையையும், இத்தளத்தின் வழி தொடங்கிய திருமணங்களையும், சமூகத்தை மையமாகக் கொண்ட ஓர் எளிய யோசனை வளர்ந்து வரும் மலேசியத் தொழில்நுட்ப வணிகமாக உருமாறியதையும் இது பிரதிநிதிக்கிறது.

