டாமன்சாரா பிஸ்தாரி, செக்ஷன் 19 பகுதியில் தீபாவளி கொண்டாட்டம் சுமார் 200 பொதுமக்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பக்தர்கள் சங்கம் மற்றும் சமூகக் குற்றத்தடுப்பு, பாதுகாப்புச் சங்கம் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன.
விழாவில் சிறுவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி, பெரியவர்களுக்கான கோலம் வரையும் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், பி40 குடும்பங்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரன், எம்பிபிஜே மன்ற உறுப்பினர் கேரி ஈ, புக்கிட் காசிங் இந்திய சமூகத் தலைவர் ஹரிதாஸ் சில்லராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் உரையாற்றிய ராஜீவ் ரிஷ்யகரன், செக்ஷன் 19 அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் நில கெசட் பெயர் மாற்றப் பிரச்சினைக்குத் தீர்வு காண முழு ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்தார். இதற்காக பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகத்திற்கு அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இவ்விவகாரத்தைச் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டு சென்று விரைவான தீர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிலத்தின் கெசட் பெயர் புதிய சங்கத்தின் பெயருக்கு மாற்றப்பட்டால், ஆலயக் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு வழிவகுக்கும். நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் சங்கத் தலைவர் ஜெயசீலன் ராஜங்கரன், கௌரவச் செயலாளர் ஜெகதீஸ் முனுசாமி மற்றும் தயாளன் அன்பழகன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
டாமன்சாரா செக் 19 பெட்டாலிங் ஜெயா ஆலய நிலப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – ராஜீவ் ரிஷ்யகரன் உறுதி!

