கோலாலம்பூர், நவம்பர் 10:
மலேசியாவின் பால் பொருள் உற்பத்தி நிறுவனமான டச்சு லேடி மில்க் இண்டஸ்ட்ரீஸ் பெர்ஹாட் (Dutch Lady Malaysia), ஜொகூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஜெமாலுவாங் டெய்ரி வேலி சென். பெர்ஹாட் (Jemaluang Dairy Valley Sdn. Bhd.) நிறுவனத்தில் 35 விழுக்காட்டுப் பங்குகளை வாங்க ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தப் பங்குகளை ஜொகூர் கார்ப்பரேஷனின் (JCorp) முழு உரிமையிலுள்ள துணை நிறுவனமான கூலிம் (மலேசியா) பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் டச் லேடி மலேசியா கையெழுத்திட்டுள்ளது.
இந்தக் கையகப்படுத்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கூலிம், ரோன் மா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் துணை நிறுவனமான ஏ2 ஃபிரெஷ் ஹோல்டிங்ஸ் சென். பெர்ஹாட் (A2 Fresh Holdings Sdn. Bhd.) ஆகியவற்றுடன் டச் லேடி மலேசியாவும் ஜெமாலுவாங் டெய்ரி வேலி நிறுவனத்தின் பங்குதாரராக இணைந்தது.
எனினும், மூன்றாம் தரப்பினரின் ஒப்புதல்கள் உள்ளிட்ட தொடர்புடைய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரே இந்தப் பங்குக் கையகப்படுத்தல் முழுமையடையும் என டச் லேடி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மலேசியாவின் வளர்ந்து வரும் புதிய பால் சந்தையில் தனது பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், நாட்டின் பால் உற்பத்தித் துறையின் நீண்டகால வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுவதாக டச் லேடி தெரிவித்துள்ளது.
மேலும், இதன் மூலம் பால் பண்ணை மற்றும் புதிய பால் உற்பத்தியில் ஜெமாலுவாங் டெய்ரி வேலியின் அனுபவம், மலேசிய பயனர்களின் தேவைகள் குறித்து அறிதல், அதன் வர்த்தக வலிமை மற்றும் ஃபிரீஸ்லேண்ட் கேம்பினாவின் (FrieslandCampina) உலகளாவிய பால் உற்பத்தி நிபுணத்துவம் ஆகியவை ஒருங்கிணைக்கப்படும்.
இதன் மூலம் மலேசியாவில் புதிய பால் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதுடன், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நாட்டின் இலக்கிற்கும் பங்களிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டச் லேடி மலேசியாவின் நிர்வாக இயக்குநர் வெரோனிகா உட்டாமி, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவுடன் இணைந்து வளர்ந்து வரும் இந்நிறுவனம், தரமான பால் ஊட்டச்சத்தின் மூலம் பல தலைமுறையினருக்கு ஊட்டமளித்து வருவதாகத் தெரிவித்தார்.
பயனர்களின் விருப்பங்கள் தொடர்ந்து மாறிவரும் நிலையில், மலேசியச் சந்தையில் நிறுவனத்தின் நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கும், புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த முதலீடு உதவும் என்றார்.
மேலும், கூலிம் மற்றும் ஏ2 ஃபிரெஷ் நிறுவனங்களுடன் இணைந்து ஜெமாலுவாங் டெய்ரி வேலியின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதுடன், பயனர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப புதிய தெரிவுகளை வழங்குவதற்கும் தங்களின் சந்தை அனுபவத்தையும் நுகர்வோர் தொடர்பான புரிதலையும் பயன்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜொகூர் கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ சையத் முகமட் சையத் இப்ராஹிம், ஜெமாலுவாங் பால் பண்ணை நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடு, ஜொகூர் மற்றும் மலேசியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் வணிக ரீதியாக நிலையான நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஜொகூர் கார்ப்பரேஷனின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.
போட்டித்தன்மை வாய்ந்த பால் உற்பத்தித் துறையை உருவாக்குவதற்கு வலுவான உள்நாட்டு உற்பத்தி, தொழில்துறை நிபுணத்துவம், நம்பகமான செயல்பாடுகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஒத்துழைப்பு மூலம் மூலதனம், நிபுணத்துவம் மற்றும் வியூகக் கூட்டாளர்களை ஒன்றிணைத்து நீண்டகாலப் பொருளாதார மதிப்பை உருவாக்கும் நோக்கம் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஃபிரீஸ்லேண்ட் கேம்பினாவின் ஆசியப் பிராந்தியத் தலைவர் கொரின் டாப், ஆசியா தொடர்ந்து நிறுவனத்தின் முக்கிய வளர்ச்சிச் சந்தையாகத் திகழ்வதாகவும், உள்ளூர் பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ற வலுவான ஒத்துழைப்பின் மூலம் நிலையான மதிப்பை உருவாக்குவதில் நிறுவனம் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, ஜெமாலுவாங் பால் பண்ணை நிறுவனம் அதன் தற்போதைய நிர்வாகத்தின் கீழேயே தொடர்ந்து செயல்படும். ஒப்புக்கொள்ளப்பட்ட நிர்வாகக் கட்டமைப்பின் அடிப்படையில் டச் லேடி மலேசியா, குலிம் மற்றும் ஏ2 ஃபிரெஷ் நிறுவனங்களுடன் இணைந்து அதன் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராயும்.
இதன் மூலம் மலேசியாவின் பால் உற்பத்திச் சங்கிலியை மேலும் மேம்படுத்துவதுடன், நுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்ற புதிய பால் பொருட்கள் மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

