Site icon அநேகன்

இரண்டாம் நிலை நகரங்களுக்கான காலநிலை நிதியை அதிகரிக்க வேண்டும்: ங்கா கோர் மிங்

அந்தால்யா, நவம்பர் 13:
வெள்ளம், நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு உள்ளிட்ட காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்க, இரண்டாம் நிலை மற்றும் இடைநிலை நகரங்களுக்கான காலநிலை நிதி வசதிகளை அதிகரிப்பதுடன், காலநிலையைத் தாங்கக்கூடிய வீடமைப்புத் திட்டங்களில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டும் என வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சரும் ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புத் திட்ட (UN-Habitat) மன்றத் தலைவருமான ங்கா கோர் மிங் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய நகரங்கள் நேரடி சலுகை அடிப்படையிலான நிதியுதவியையும், திட்டங்களைத் தயாரிப்பதற்கான ஆதரவையும் பெறுவதில் தொடர்ந்து தடைகளை எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த இடைவெளியைக் குறைக்கும் வகையில், நகராட்சி முதலீடுகளில் உள்ள இடர்களைக் குறைத்தல், உள்ளாட்சி அமைப்புகள் நிதியுதவி பெறக்கூடிய வகையில் செயல்படுத்தத் தயாரான திட்டங்களை உருவாக்க உதவுதல், பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாத்தல் மற்றும் புதுமையான முதலீட்டு நிதிகளைத் திரட்டுதல் ஆகியவற்றை முக்கிய முன்னுரிமைகளாக அவர் முன்வைத்தார்.
உள்ளாட்சி அமைப்புகள் முதலீட்டுக்குத் தகுதியான, உடனடியாகச் செயல்படுத்தக்கூடிய திட்டங்களை உருவாக்குவதற்கு அதிகாரமளிக்க வேண்டும் என்றும், முறைசாரா குடியிருப்புகளை மேம்படுத்துவதுடன் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய சமூக வீடமைப்புத் திட்டங்களையும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் ங்கா கோர் மிங் வலியுறுத்தினார்.
மேலும், துருக்கியின் நிலையான நகர்ப்புற மீள்திறன் நிதி வசதிக்கு (SURFF) மலேசியா வலுவான ஆதரவைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இத்திட்டத்தை விரிவுபடுத்த சர்வதேச நிதி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

துருக்கியின் அந்தால்யா நகரில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற COP31 தலைவர்கள் உச்சநிலை மாநாட்டின் நகர்ப்புற மீள்திறன், தகவமைப்பு மற்றும் காலநிலை நடவடிக்கைகள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலில் அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி, நகர்ப்புறங்களின் மீள்திறனை வலுப்படுத்துவதற்கும் காலநிலை நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்குமான வழிமுறைகள் குறித்து விவாதித்தனர்.

இதனிடையே, தேசிய அளவிலான காலநிலை இலக்குகளை மக்களின் வாழ்வில் நேரடியான மாற்றங்களாகக் கொண்டுவர வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் ங்கா கோர் மிங் எடுத்துரைத்தார்.

அவற்றில், பருவமழைக் கால திடீர் வெள்ளநீரை உறிஞ்சுவதுடன் பசுமையான பொது இடங்களாகவும் செயல்படும் பல்நோக்கு நீர் உறிஞ்சும் பூங்காக்களை உருவாக்குதல், சமூக வீடமைப்புத் திட்டங்களின் கூரைகளில் சூரியசக்தித் தகடுகளைப் பொருத்துதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய சமூக வீடமைப்புத் திட்டங்கள், பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதுடன், அவை உண்மையில் தேவைப்படுவோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தகவமைப்பு நடவடிக்கைகள் செலவினம் அல்ல; அவை நமது உயிர்வாழ்வுக்கான அடிப்படைத் தேவை. வாக்குறுதிகள் நடைமுறையாகவும், கொள்கைகள் பாதுகாப்பாகவும், இலட்சியங்கள் செயல்பாடுகளாகவும் மாறும் உச்சநிலை மாநாடாக அந்தால்யா அமைய வேண்டும்,” என்று ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

உலகிற்கு இனி வெறும் பேச்சுகள் தேவையில்லை என்றும், பேரழிவுகளைத் தவிர்ப்பதற்கும், உடனடி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும், நீடித்த நகர்ப்புற மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் செயலில் இறங்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய அளவிலான காலநிலை உறுதிமொழிகளுக்கு உள்ளூர் நிலையில் உரிய நிதி ஒதுக்கீடும் செயலாக்க நடவடிக்கைகளும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும், அதன் மூலமே உலகளாவிய இலக்குகள் மக்களுக்கான உண்மையான பாதுகாப்பை வழங்க முடியும் என்றும் உலகத் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version