Site icon அநேகன்

PMKS நிறுவனங்களுக்கு 90 மில்லியன் ரிங்கிட் நிதி: ஸ்டீவன் சிம்

பெட்டாலிங் ஜெயா:

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (PMKS) மொத்தம் 90 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு நிதி கிடைக்கவுள்ளதாகத் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.

SME Corp. Malaysia, OSK மற்றும் பெர்பாடானன் நேஷனல் பெர்ஹாட் (Pernas) ஆகியவற்றுக்கு இடையிலான மூலோபாய ஒத்துழைப்பின் மூலம் இந்நிதி வழங்கப்படவுள்ளது.

SME Corp. முன்னெடுக்கும் இத்திட்டத்தின் கீழ், அரசாங்கம் 45 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதுடன், மூலோபாயப் பங்காளிகளின் பங்களிப்புடன் மொத்த நிதி 90 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளதாக ஸ்டீவன் சிம் கூறினார்.

இந்த நிதியின் மூலம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய துறைகளில் செயல்படும் PMKS நிறுவனங்கள், பங்குரிமை முதலீடு உள்ளிட்ட நிதியுதவி வழிமுறைகளைப் பெற முடியும் என்றும், இது அவற்றின் வணிக வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், போட்டித்தன்மையை வலுப்படுத்தவும், வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் PMKS நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், SME Corp. Malaysia-வின் புதிய தலைமையகக் கட்டடம் செயல்படத் தொடங்கியுள்ளதால், வாடகைச் செலவைக் குறைத்து ஆண்டுக்கு 17 மில்லியன் ரிங்கிட் சேமிக்க முடியும் என்றும், அடுத்த 30 ஆண்டுகளில் மொத்தம் 500 மில்லியன் ரிங்கிட் சேமிக்க முடியும் என்றும் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

SME Corp. தலைமையகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

Exit mobile version