லங்காவி:
உலகப் புகழ்பெற்ற IRONMAN 70.3 முத்தரப்பு விளையாட்டுப் போட்டியில் மலேசிய இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் டத்தோ சிவராஜ் சந்திரன் பங்கேற்கவுள்ளார்.
வரும் நவம்பர் 21ஆம் தேதி (சனிக்கிழமை) கெடா மாநிலத்தின் லங்காவி தீவில் நடைபெறவுள்ள இப்போட்டியில், 65 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,000 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மிகுந்த உடல் வலிமை, மன உறுதி மற்றும் விடாமுயற்சியைச் சோதிக்கும் இப்போட்டி மூன்று கடினமான விளையாட்டுப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக 1.9 கிலோமீட்டர் தூரம் கடலில் நீந்த வேண்டும். தொடர்ந்து 90 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டுவதுடன், இறுதியாக 21.1 கிலோமீட்டர் தூரம் ஓட வேண்டும். மொத்தம் 113 கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதே இப்போட்டியின் சவாலாகும்.
மஇகா வியூகப் பிரிவு அதிகாரியாகப் பொறுப்பு வகிக்கும் டத்தோ சிவராஜ் சந்திரன், விளையாட்டுத் துறையில் அதீத ஆர்வம் கொண்டவர்.
அரசியல் மற்றும் சமூகப் பணிகளுக்கு மத்தியில் விளையாட்டுத் துறையிலும் தனது திறமையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி வரும் அவரது இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இத்தகைய கடினமான போட்டியில் அவர் பங்கேற்பது, மலேசியத் தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பதுடன், இளைய தலைமுறையினருக்கும் விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும் முயற்சியாக அமையும்.

