மலேசியாவின் படைப்புத் துறையை மேலும் வலுப்படுத்துவதுடன், உள்ளூர் கலைஞர்களின் திறமைகளை உலகளவில் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும் என்று சிலாங்கூர் முற்போக்கு தலைமுறை கட்சியின் (PGP) உறுப்பினரும், தேசிய மஇகா புத்ரா பிரிவின் உதவிச் செயலாளருமான பூர்வின் ரவிச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவின் 35ஆவது திரைப்பட விழாவில் (FFM35) வெற்றி பெற்ற அனைவருக்கும், அதேபோல் தைவானில் நடைபெற்ற 63ஆவது கோல்டன் ஹார்ஸ் விருதுகள் 2026 நிகழ்வில் மலேசியாவுக்குப் பெருமை சேர்த்த கலைஞர்களுக்கும் அவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
குறிப்பாக, கோல்டன் ஹார்ஸ் விருதுகளில் சிறந்த புதிய கலைஞர் (Best New Performer) பிரிவில் விருது வென்ற முதல் மலேசியர் என்ற பெருமையைப் பெற்ற நந்தகோபால் மோகனின் சாதனையையும், சிறந்த ஒளிப்பதிவு (Best Cinematography) பிரிவில் அங்கீகாரம் பெற்ற கார்த்திக் விஜயின் சாதனையையும் அவர் பாராட்டினார். மேலும், FFM35 திரைப்பட விழாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியக் கலைஞர்கள் பெற்ற வெற்றிகள் பெருமைக்குரியவை என்றும் குறிப்பிட்டார்.
மலேசியாவில் இனம், மதம், பின்னணி ஆகியவற்றைக் கடந்து திறமையான கலைஞர்கள் சர்வதேச அளவில் போட்டியிட்டு நாட்டின் பெயரை உயர்த்த முடியும் என்பதற்கு இத்தகைய சாதனைகள் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. இவை இளைய தலைமுறையினர் படைப்புத் துறையில் துணிச்சலுடன் கால்பதிக்க ஊக்கமளிப்பதுடன், பொழுதுபோக்குத் துறையாக மட்டுமின்றி பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளூர் தொழில்முனைவோரை உருவாக்கும் முக்கியத் துறையாகவும் படைப்புத் துறையை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான FINAS மூலம் நிதியுதவி, திறன் மேம்பாடு, தொழில்முறைப் பயிற்சி மற்றும் புதிய கலைஞர்களுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மலேசியக் கலைஞர்களிடம் திறமைக்குப் பஞ்சமில்லை; அவர்களின் வளர்ச்சிக்கு வலுவான ஆதரவு, நம்பிக்கை மற்றும் சரியான கட்டமைப்புகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலகத் தரம் வாய்ந்த கலைஞர்களை உருவாக்கும் ஆற்றல் மலேசியாவுக்கு இருப்பதால், படைப்புத் துறைக்கு தேசியப் பொருளாதார வளர்ச்சியில் உரிய இடம் வழங்கப்பட வேண்டும். கலைஞர்களின் சாதனைகளைப் பாராட்டுவதோடு நின்றுவிடாமல், எதிர்காலத்தில் மேலும் பல சர்வதேசத் திறமையாளர்களை உருவாக்குவதற்கான சூழலையும் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும் என்று பூர்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

