கோலாலம்பூர்: மலேசியாவில் ஹிண்ட்ராஃப் அமைதிப் பேரணி நடைபெற்று 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியச் சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்று மலேசிய முன்னேற்றக் கட்சியின் (MAP) துணைத் தலைவர் மோகன் எல்லப்பன் தெரிவித்துள்ளார்.
2007ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி ஆயிரக்கணக்கான மலேசிய இந்தியர்கள் ஒன்றிணைந்து தங்களது உரிமைகளையும் நீதியையும் வலியுறுத்தி நடத்திய ஹிண்ட்ராஃப் பேரணி, நாட்டின் இந்தியச் சமூக வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அப்போராட்டத்தின் மூலம் ஒரு சமூகத்தின் உரிமைகளும் நலன்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்படும்போது, மக்கள் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முன்வருவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இருப்பினும், 19 ஆண்டுகள் கடந்தும் தமிழ்ப்பள்ளிகள், கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், பதவி உயர்வுகள், குடியுரிமை, மயான நிலங்கள், ஆலய நிலங்கள் மற்றும் சொந்த வீடு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட இந்தியச் சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, ஹிண்ட்ராஃப் போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்கள் பின்னர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றிருந்தாலும், சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இன்னும் எதிர்பார்த்த அளவில் அமையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு அரசாங்கங்களும் பிரதமர்களும் மாறியுள்ள போதிலும், இந்தியச் சமூகத்தைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து நீடிப்பதாக அவர் விமர்சித்தார்.
இந்தியச் சமூகத்தின் நலன்கள் தேசிய மேம்பாட்டுத் திட்டங்களில் உண்மையாக இடம்பெறுகின்றனவா அல்லது தேர்தல் காலங்களில் மட்டுமே வாக்குறுதிகளாக முன்வைக்கப்படுகின்றனவா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
மேலும், இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டிற்குத் தனித்துவமான செயல்திட்டம், போதுமான நிதி ஒதுக்கீடு, முறையான அமலாக்கம் மற்றும் அளவிடக்கூடிய இலக்குகளுடன் கூடிய நீண்டகாலத் திட்டமிடல் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
இந்த விவகாரங்களில் மலேசிய முன்னேற்றக் கட்சியும் ஹிண்ட்ராஃப் தலைவர் பி. வேதமூர்த்தியும் இந்தியச் சமூகத்திற்கான சிறப்பு மேம்பாட்டுத் திட்டங்களை மலேசியத் திட்டம் மற்றும் தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறச் செய்வதற்கான கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியச் சமூகத்திற்குத் துணிச்சல், நேர்மை, கொள்கைப்பற்று மற்றும் ஊழலற்ற தலைமைத்துவம் தேவைப்படுவதாகக் கூறிய மோகன் எல்லப்பன், அரசியல் பதவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் சமூகத்தின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் தலைமைத்துவமே அவசியம் என்றார்.
ஹிண்ட்ராஃப் போராட்டத்தின் உணர்வு வெறும் நினைவுகூரலாகவும் அரசியல் முழக்கமாகவும் மட்டும் நின்றுவிடாமல், நடைமுறைச் செயல்பாடுகளாகவும் கண்கூடான சாதனைகளாகவும் மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“19 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியச் சமூகத்திற்குத் தேவை இனிப்பான வாக்குறுதிகள் அல்ல; உறுதியான தீர்வுகளும் அர்த்தமுள்ள மாற்றங்களுமே. இலட்சியங்கள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது“ என்று மோகன் எல்லப்பன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

