Site icon அநேகன்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: 3 பேரின் குடும்பத்தினர் போலீஸ், அரசாங்கத்திற்கு எதிராக சிவில் வழக்குத் தொடர முடிவு

மலாக்கா, நவம்பர் 25 –

டுரியான் துங்காலில் கடந்த ஆண்டு போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மூன்று ஆடவர்களின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து, அரசாங்கம் மற்றும் போலீசாருக்கு எதிராக சிவில் வழக்குத் தொடர அவர்களின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட ஜி. லோகேஸ்வரன், டி. பூவனேஸ்வரன், எம். புஷ்பநாதன் ஆகியோரின் குடும்பத்தினர் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களான ராஜேஷ் நாகராஜன், சச்பிரீத் ராஜ் சிங் ஆகியோர், மரணங்கள் தொடர்பான விசாரணை நீதிமன்ற நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று மீண்டும் விமர்சித்துள்ளனர்.

விசாரணை நீதிமன்றம் ஒருவர் எவ்வாறு, எப்போது உயிரிழந்தார் என்பதை மட்டுமே உறுதிப்படுத்தும் என்றும், குற்றவாளிகளைத் தீர்மானிக்கவோ அவர்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவோ அதற்கு அதிகாரம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் (AGC) இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

“சம்பவம் தொடர்பான ஒலிப்பதிவும் பிரேதப் பரிசோதனை முடிவுகளும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் உள்ளன.

இத்தனை ஆதாரங்கள் இருந்தும், இந்த மரணங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது இன்னும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை.

“குற்றவியல் நடவடிக்கைக்கு மாற்றாக இந்த விசாரணை நீதிமன்ற நடவடிக்கையை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பொறுப்பேற்கச் செய்ய அரசாங்கம் தவறினால், அதனை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் செய்வார்கள்,” என்று அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி, மலாக்கா போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று ஆடவர்களும் கொல்லப்பட்டனர்.

அவர்கள் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்றும், போலீஸ் அதிகாரி ஒருவரை பராங்கால் தாக்கியதாகவும் அப்போது போலீசார் தெரிவித்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்காக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எனினும், ஒலிப்பதிவு மற்றும் தடயவியல் ஆதாரங்கள் மூன்று ஆடவர்களும் திட்டமிட்டு சுட்டுக் கொல்லப்பட்டதைக் காட்டுவதாக அவர்களின் குடும்பத்தினர் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

குற்றவியல் சட்டத்தின் 307ஆவது பிரிவின் கீழ் கொலை முயற்சி தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டது.

இதனிடையே, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஆடவர்களில் ஒருவர் சம்பவத்திற்கு முன்பு தனது மனைவியுடன் தொலைபேசியில் பேசியதாக நம்பப்படும் ஒலிப்பதிவு ஒன்று போலீசாருக்குக் கிடைத்துள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயில் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 16ஆம் தேதி, இவ்வழக்கை கொலை வழக்காக மறுவகைப்படுத்துமாறு சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் உத்தரவிட்டது.

இதனிடையே, உயிரிழந்த மூவரின் மரணத்திற்கான காரணம், சூழ்நிலைகள் மற்றும் சம்பவம் தொடர்பான உண்மைகளை ஆராய்வதுடன், குற்றவியல் சட்டங்கள் ஏதேனும் மீறப்பட்டுள்ளனவா என்பதைத் தீர்மானிக்கும் நோக்கில் கடந்த ஜூலை 20ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தை நடத்த சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் உத்தரவிட்டது

Exit mobile version