Site icon அநேகன்

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து காங்., தி.மு.க. போராட்டம்!

மதுரை:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு இதே தினத்தன்று தான் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் இந்த அறிவிப்பு சுனாமி அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் 1 மாதம் மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் வரிசையில் நின்று வாடி வதங்க நேரிட்டது.

மோடி ஏன் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து விட்டு புதிதாக ரூ.500, ரூ.2000 நோட்டுகளை அறிமுகம் செய்தார் என்று மக்கள் மனதில் கேள்வி எழுந்தது. அதற்கு மத்திய அரசு தரப்பில், “கருப்புப் பணத்தை ஒழிப்பது, ஊழலை அகற்றுவது, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது, ரொக்கப் பணப்பரிவர்த்தனையை குறைப்பது, வரி வருவாயை அதிகரிக்க செய்வது ஆகிய 5 குறிக்கோள்களை இலக்காகக் கொண்டு பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை கேட்டதும், நாட்டு நலனுக்காக பண மதிப்பு நீக்கப்பட்டிருப்பதால் அதை ஏற்கலாம் என்று கணிசமானவர்கள் கருதினார்கள். இயல்பு வாழ்க்கையில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட இடையூறுகளை கூட சமாளித்துக் கொண்டனர். தற்போது பண மதிப்பு நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டு மிகச்சரியாக ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், அது வெற்றியா அல்லது தோல்வியா என்பதை அறிந்து கொள்ள மக்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு விடை தெரிய வேண்டுமானால் மத்திய அரசின் 5 குறிக்கோள்களில் வெற்றி கிடைத்ததா? என்பதை அலசிப் பார்த்தால தெரிந்து விடும். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும் 99 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்து விட்டது. இதை மத்திய அரசு எதிர்பார்க்கவில்லை.

சுமார் ரூ.5 லட்சம் கோடி வரையிலான நோட்டுகள் திரும்பி வராது என்று மத்திய அரசு நினைத்தது. ஆனால் நடந்தது வேறு. இதில் பிரதமர் மோடிக்கு முதல் தோல்வி ஏற்பட்டது. அடுத்து ஊழல் ஒழிப்புக்கு பண மதிப்பு நீக்க நடவடிக்கை எந்த வகையிலும் கை கொடுக்கவில்லை என்பது உறுதியானது. ஊழலை நிர்வாக நடவடிக்கைகள் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது. அது போல தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை எத்தனை சதவீதம் கை கொடுத்துள்ளது என்பதை சொல்ல இயலவில்லை. இந்த நிலையில் ரொக்கப் பண பரிவர்த்தனையை குறைக்கவும் பண மதிப்பு நீக்க நடவடிக்கை கை கொடுக்கும் என்று பிரதமர் மோடி எதிர்பார்த்தார். இந்தியாவில் இன்னமும் விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை-எளியவர்கள் என சுமார் 80 சதவீதம் பேர் ரொக்கப் பண பரிமாற்றம்தான் செய்கிறார்கள். ஆக இந்த வி‌ஷயத்திலும் மத்திய அரசுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

இறுதியான 5-வது குறிக்கோளான வரி வருவாயை அதிகரிக்கச் செய்வது என்பதில் மட்டும் மத்திய அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. வரி வருவாய் மட்டும் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. அதோடு போலி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விட்டது. இதை மத்திய அரசு வெற்றி என்று கூறினாலும் சிறு-குறு தொழில்கள் முடங்கி பொருளாதாரத்தில் மந்த நிலை உருவானது. மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. வணிகம் முடங்கியதால் நிறைய பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டது.

மொத்தத்தில் உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் வீழ்ந்தது. எனவே பண மதிப்பு நீக்க நடவடிக்கை பொருளாதார சீர்கேட்டுக்கு வழி வகுத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. குறிப்பாக முன்னாள் பிரதமரும், பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு இந்த அதிரடி நடவடிக்கை தேவை இல்லாத ஒன்று. இது பொருளாதாரத்தை பின்னடையச் செய்து விடும் என்றார். இந்த நிலையில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ளது. இந்த நவம்பர் 8-ந்தேதியை “கருப்பு தினம்” ஆக கடைபிடித்து எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. நாடு முழுவதும் முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் முடிவு செய்தன.

அதன்படி இந்தியா முழுவதும் இன்று பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். பல இடங்களில் வணிகர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். சூரத் நகரில்தான் பெரும்பாலான சிறு-குறு தொழில்கள் பண மதிப்பு நீக்கத்தால் முடங்கின. எனவே ராகுல்காந்தி அந்த நகரை தேர்வு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். டெல்லி கன்னட் பிளேசில் நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இந்த ஆர்ப்பாட்டத்தில் உத்வேகம் அதிகமாக காணப்பட்டது. காங்கிரசின் கூட்டணி கட்சிகளும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றன.

காங்கிரஸ் கூட்டணியில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க. இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்வதால் 8 மாவட்டங்களில் மட்டும் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் திட்டமிட்டப்படி தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை அண்ணா நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர். அவர்கள் மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

Exit mobile version