கோலாலம்பூர், நவ. 9-
மேலவை சபாநாயகர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் பத்திரிக்கைச் செயலாளராக ம.இ.காவின் முன்னாள் தகவல் பிரிவுத் தலைவர் எல். சிவசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ம.இ.கா.வின் முன்னாள் தலைவர்கள் துன் எஸ். சாமிவேலு, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் சிவசுப்ரமணியம், 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து பழனிவேல் ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார்.
ம.இ.கா. தலைவராக டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பதவியேற்றப் பின்னரும் சிவசுப்ரமணியம் அவருடைய தலைமைத்துவதில் இணையவில்லை. மாறாக, பழனிவேல் ஆதரவாளர்களான ம.இ.கா பத்து தொகுதி தலைவர் ராமலிங்கம், டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார். குறிப்பாக மஇகா தலைவர் டத்தோஸ்ரீ சுப்ரமணியத்தை தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது என்று தொடர்ந்து மார்த்தட்டி வந்த சிவசுப்ரமணியம், திடீரென அந்தர் பல்டி அடித்துள்ளார்.
அண்மைய காலமாக கொடை நெஞ்சர் ஓம்ஸ் தியாகராஜனுடன் வலம் வந்த அவர், துணையமைச்சருக்கு எதிராக புகார் எழுந்தபோதும், பொங்கி எழுந்தார். எனினும் சிவசுப்ரமணியம் தற்போது விக்னேஸ்வரனின் பத்திரிக்கைச் செயலாளராக பொறுப்பேற்றிருப்பதாக கூறப்படுவது பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது. முன்னதாக டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் குறித்து தொடர்ந்து குற்றங்களை அடுக்கி வந்த டத்தோ ரமணனையும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தான் அரவணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

