அலோர் காஜா, ஜூலை 20-
கோலா லிங்கி படகுத்துறையிலுள்ள ஒரு கப்பலில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய இளைஞர் ஒருவர் அங்கு வெளியான நச்சு இராசயணத்தை சுவாசித்ததைத் தொடர்ந்து மூச்சு திணறி மரணமடைந்தார்.
இந்த துயரச் சம்பவம் நேற்று மாலை மணி 5.30 அளவில் நிகழ்ந்த்து. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கோலசிலாங்கூரைச் சேர்ந்த டி.சதிஷ் (வயது 31) என அடையாளம் காணப்பட்டது. அவர் அந்த கப்பலில் வெல்டிங் பணிகளை மேற்கொள்ள வந்து 8 நாட்கள் ஆகியதாக கூறப்படுகின்றது. சம்பந்தப்பட்ட இளைஞருடன் வேலை செய்துவந்த இதர மூன்று தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சம்பவத்தின் போது சதிஷ் அந்த கப்பலின் இயந்திர பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார். திடிரென அப்பகுதியில் வெளியான நச்சு இராசயணத்தை சுவாசித்த அவர் அங்கேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகின்றது. 30 வயதுகுட்பட்ட இதர 3 தொழிலாளர்களும் அந்த கப்பலிருந்து உடனடியாக வெளியேறினர்.
மஸ்ஜித் தானா தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் அதிகாரி இஸ்மாயில் இஸ்கண்டார் ஷா அப்துல்லா கூறுகையில், இச்சம்பவம் தொடர்பில் தங்களுக்கு அவசர அழைப்பு
கிடைத்ததைத் தொடர்ந்து மாலை மணி 5.37 அளவில் அப்பகுதிக்கு விரைந்ததாக கூறினார்.
அந்த கப்பலின் இயந்திர பகுதியில் சதிஷ் மயங்கி விழுந்திருந்த நிலையில் காணப்பட்டார். மாலை மணி 6.20 அளவில் அலோர் காஜா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் அபாயகரமான பொருட்கள் பிரிவைச் சேர்ந்த குழுவினர் அவரை அந்த கப்பலிலிருந்து வெளியேற்றினர். அந்த கப்பலின் உட்புற பகுதியிலுள்ள பாதை சிறியதாக இருந்ததால் சதிஷை அங்கிருந்து வெளியே கொண்டு வருவதற்கு சுமார் 40 நிமிடங்கள் பிடித்தது.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த மருத்துவ அதிகாரி சதிஷ் மரணமடைந்து விட்டதை உறுதி செய்தார். மூச்சு திணரலுக்கு இலக்கான இதர 3 தொழிலாளர்களும் அலோர் காஜா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். சதிஷின் சடலம் பிரேத பரிசோதணைக்காக அதே மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்மாயில் இஸ்கண்டார் ஷா அப்துல்லா குறிப்பிட்டார்.
