கோலாலம்பூர், நவ. 14-
இந்நாட்டிலுள்ள ஆசிரியர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கமும் கல்வியமைச்சும் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக அவர்களை பல பயிற்சி திட்டங்களுக்கு அனுப்பி வைத்து அவர்களது கல்வி தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக துணைக்கல்வியமைச்சர் டத்தோ பி.கமலநாதன் தெரிவித்தார்.
இன்று ஜாலான் சுல்தான் ஹஹி அஸ்மான் ஷாவில் அமைந்துள்ள அனைத்துலக வாணிப தொழில்துறை அமைச்சின் அலுவலகத்தில் இங்கிலாந்தும் மலேசியாவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மழலையர் பாதுகாப்பு தரம் மற்றும் கல்வி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர் தமதுரையில் கூறினார். இந்நிகழ்வில் பிரிட்டிஸ் துணை தூதர் போல் ரேனியும் கலந்து கொண்டார்.
அரசாங்க பாலர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் டிப்ளோமா சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மலேசிய கல்வி புலுபிரின் திட்டம் 2025ஆம் ஆண்டு வரையில் பல திட்டங்களை வகுத்து வைத்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு மலேசியா முழுவதிலும் 77 விழுக்காடு மாணவர்கள் 40,000 பாலர் வகுப்புகளில் பதிவு செய்யப்பட்டனர். எதிர்வரும் 2020ஆம் ஆண்டிற்குள் 900, 000 மாணவர்கள் பாலர் வகுப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என மலேசிய கல்வி திட்டவரைவு இலக்கு கொண்டுள்ளது.
பாலர்பள்ளி முதலே மாணவர்களுக்கு நல்ல கல்வி திறன், மொழியாற்றல், நன்னெறி பண்புகள், ஆகியவற்றை கற்றுக் கொடுத்தாக வேண்டும். அவை அனைத்தும் ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது. இது போன்ற கல்வி கருத்தரங்குகளை நடத்துவதால் மாணவர்களை தயார்படுத்தும் நடவடிக்கைகளில் ஆசிரியர்களின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என டத்தோ பி.கமலநாதன் குறிப்பிட்டார்.

