கோலோக்னே, நவ.15 –
ஜெர்மனியில் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் நடப்பு உலகக் கிண்ண வெற்றியாளரான ஜெர்மனி 2 – 2 என்ற கோல்களில் பிரான்சுடன் சமநிலைக் கண்டது. இந்த ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரராக நுழைந்த லார்ஸ் ஸ்டின்டல் போட்ட கோலினால் ஜெர்மனி தோல்வியில் இருந்து தப்பியது.
ஐரோப்பிய கால்பந்து மண்டலத்தில் மிகப் பெரிய ஜாம்பாவன் அணிகளாக விளங்கும் ஜெர்மனியும், பிரான்சும் சந்தித்த ஆட்டம் கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த ஆட்டத்தில் அர்செனல் தாக்குதல் ஆட்டக்காரர் அலெக்சாண்டர் லக்காசாட் இரண்டு கோல்களைப் போட்டு அதிரடி படைத்துள்ளார்.
34 ஆவது நிமிடத்தில் அந்தோனி மார்சியல் கொடுத்த பந்தை, லக்காசாட் கோலாக்கினார். இரண்டாம் பாதி ஆட்டத்தின் 56 ஆது நிமிடத்தில் திமோ வார்னர் அடித்த கோலின் வழி ஜெர்மனி ஆட்டத்தை சமப்படுத்தியது. எனினும் ஜெர்மனியின் மகிழ்ச்சி சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.
மீண்டும் லக்காசாட் போட்ட கோலின் மூலம் பிரான்ஸ் முன்னணிக்கு சென்றது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் மரியோ கோட்சே கொடுத்த பந்தை லார்ஸ் ஸ்டின்டல் கோலாக்கியதன் வழி ஜெர்மனி தோல்வியில் இருந்து தப்பியது.
