Site icon அநேகன்

எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் டென்மார்க் !

டப்ளின், நவ.15 –

எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு டென்மார்க் மீண்டும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கேற்கவிருக்கிறது. செவ்வாய்கிழமை அயர்லாந்து குடியரசின் டப்ளின் நகரில் நடைபெற்ற பிலே ஆப் ஆட்டத்தில் டென்மார்க் 5 – 1 என்ற கோல்களில் அயர்லாந்து குடியரசை வீழ்த்தியது.

கடந்த வாரம் கோப்பன்ஹேகனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் ஏதுமின்றி சமநிலைக் கண்டது. இந்நிலையில் இரண்டாவது ஆட்டம் அயர்லாந்து குடியரசின் சொந்த அரங்கில் நடைபெற்றிருந்தாலும் டென்மார்க்கின் கையே ஓங்கியது.

குறிப்பாக டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் கிளப்பில் விளையாடி வரும் கிறிஸ்டியன் எரிக்சன் டென்மார்க்கின் வெற்றிக்கு சூத்திரதாரியாக விளங்கினார். இந்த ஆட்டத்தில் எரிக்சன் மூன்று கோல்களைப் போட்டு ஹாட்ரீக் சாதனையைப் படைத்துள்ளார்.

ஆட்டம் தொடங்கிய ஆறாவது நிமிடத்தில் ஷேன் டஃபி போட்ட கோலின் மூலம் அயர்லாந்து குடியரசு முன்னணி வகித்தது. எனினும் முதல் பாதி ஆட்டத்தில் டென்மார்க் இரண்டு கோல்களைப் போட்டு முன்னணிக்கு சென்றது. 19 ஆவது நிமிடத்தில் அயர்லாந்து ஆட்டக்காரர் கிரூஸ் கிறிஸ்டி போட்ட கோலின் வழி டென்மார்க் ஆட்டத்தை சமப்படுத்தியது.

மூன்று நிமிடங்களுக்குப் பின்னர் கிறிஸ்டியன் எரிக்சன் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார். இரண்டாம் பாதியில் 63, 73 ஆவது நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்களைப் போட்டு கிறிஸ்டியன் எரிக்சன் ஹாட்ரீக் சாதனையைப் படைத்தார். 90 ஆவது நிமிடத்தில் நிக்லஸ் பென்டனர் போட்ட கோல் டென்மார்க்கின் மிகப் பெரிய வெற்றியை உறுதிச் செய்தது.

Exit mobile version