கோலாலம்பூர், நவ.15-
நம்பிக்கை கூட்டணியின் 30 வேட்பாளர்கள் தங்களின் சொத்துகளை அறிவிப்பார்கள் என ரபிசி ரம்லியின் இன்வோக் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி பற்றி தெரியாது என அக்கூட்டணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் நம்பிக்கை கூட்டணியின் தலைவர் மன்றம் சம்பந்தப்படவில்லை என்றும் அதும் இன்வோக் அமைப்பின் தனிப்பட்ட நிகழ்ச்சி என்றும் நம்பிக்கை கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இது இன்வோக் சம்பந்தப்பட்ட விவகாரம். இதை ரபிசியிடம் போய் கேளுங்கள். எங்களுக்கு ஒன்றும் தெரியாது. அது இன்வோக்கின் விவகாரம் என இன்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் சொத்து விபரங்களை அறிவிப்பீர்களா? என செய்தியாளர்கள் வினவிய போது துன் மகாதீர் ஒப்புக்கொண்டார். அதேவேளையில், தாம் வேட்பாளராக இருப்பேனா அல்லது இல்லையா என்பது குறித்து தமக்கு தெரியாது என துன் மகாதீர் பதிலளித்தார்.

