Site icon அநேகன்

இத்தாலி பயிற்றுனர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் கியான் பியரோ வென்சுரா!

மிலான், நவ.16 –

இத்தாலி கால்பந்து அணியின் பயிற்றுனர் பொறுப்பில் இருந்து கியான் பியரோ வென்சுரா நீக்கப்பட்டுள்ளார். 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தேர்வுப் பெறுவதில் இத்தாலி தோல்வி கண்டதை அடுத்து கியான் பியரோ வென்சுரா பயிற்றுனர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இத்தாலி கால்பந்து சங்கத்தின் தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சுவீடனுக்கு எதிரான பிலே ஆப் ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்தாலும் பயிற்றுனர் பொறுப்பில் இருந்து வெளியேறப் போவதில்லை என 69 வயதுடைய வென்சுரா தெரிவித்திருந்தார். இருப்பினும் 60 ஆண்டுகளில் முதல் முறையாக உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி வாய்ப்பை இத்தாலி இழந்துள்ள வேளையில் அதன் எதிரொலியாக கியான் பியரோ வென்சுராவின் பயிற்றுனர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி கால்பந்து சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து கார்லோ தவேச்சியோவும் வெளியேற வேண்டும் என நெருக்குதல் வலுத்து வருகிறது.எனினும் தவேச்சியோ இத்தாலி கால்பந்து சங்கத்தின் தலைவர் பொறுப்பில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தாலி கால்பந்து சங்கத்தின் கூட்டத்தில் புதிய பயிற்றுனர் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செல்சி, ரியல் மெட்ரிட் கிளப்புகளின் முன்னாள் பயிற்றுனர் கார்லோ அன்செலோட்டி புதிய பயிற்றுனராக நியமிக்கப்படலாம் என ஆருடங்கள் கூறப்படுகின்றன. பயிற்றுனர் பொறுப்பை அன்செலோட்டி நிராகரிக்கும் பட்சத்தில் செயின் பீட்டர்ஸ்பேக் கிளப்பின் நிர்வாகி ரோபேர்ட்டோ மன்சினியிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்படலாம் என கணிக்கப்படுகிறது.

Exit mobile version