கோலாலம்பூர், நவ.16-
ஒரே மலேசியா பயிற்சி திட்டங்களின் வாயிலாக சுமார் 139,398 பட்டதாரிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்க நிறுவனங்கள் (ஜி.எல்.சி) உள்பட பல்வேறு நிறுவனங்களின் வழி வேலை சந்தைக்கு தயார்படுத்துவதற்கு அரசாங்கம் உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர்துறை துணையமைச்சர் செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி கூறுகையில், கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரையில் சுமார் 58,354 பட்டதாரிகள் பல்வேறு நிறுவனங்களில் இந்த ஒரே மலேசியா பயிற்சி திட்டத்தில் பங்கேற்று வேலை வாய்ப்பினை பெற்றுள்ளதாக அவர் கூறினார். அதோடு, நாடு முழுவதிலும் நடத்தப்பட்ட ஒரே மலேசியா பயிற்சி திட்டத்தின் வேலை வாய்ப்பு சந்தை அல்லது ‘‘சேர்ச் எண்ட் அசிஸ்ட் திட்டத்தின் வாயிலாக சுமார் 81,044 பட்டதாரிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டதாக டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி சொன்னார்.
முன்னராக தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ வீ ஜேக் செங் இந்த பயிற்சி திட்டம் குறித்து கேள்வியெழுப்பினார். அவரது கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்த பயிற்சி திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட பட்டதாரிகளுக்கு குறிப்பிட்ட நிறுவனங்களில் குறைந்தது இரண்டு மாதங்கள் மென்திறன் பயிற்சிகளும் அதனை தொடர்ந்து 10 மாதங்கள் வேலையிடத்தில் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றது. பட்டதாரிகளின் செயல்திறனை மேம்படுத்துவதோடு நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப அவர்களிடையே தொழில்நுட்ப திறனை வளர்ப்பதே இந்த பயிற்சியின் நோக்கமாகும் என டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி குறிப்பிட்டார்.

