கோலாலம்பூர், நவ. 16-
வாகன கடன் வழங்கிய வங்கியின் அனுமதியின்றி தங்களது கார்களை மூன்றாம் தரப்பிடம் அடமானம் வைக்கும் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படலாம் என துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி தெரிவித்தார்.
கடனை செலுத்துவதற்காக மூன்றாம் தரப்பிடம் தங்களது கார்களை அடமானம் வைத்து அல்லது ஒப்படைத்துவிட்டு பணத்தை அதன் உரிமையாளர்கள் பெறுவது 1967ஆம் ஆண்டு வாடகை விற்பனை சட்டத்தை மீறுவதாகும் என அவர் கூறினார். கார்களின் கடனை மற்றொருவர் வங்கியில் தொடருதல் (சம்போங் பாயார்), அடமானம் வைத்தல் முதலானவை வாடகை விற்பனை சட்டத்தை மீறும் நடவடிக்கை என்பதோடு உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர்துறை அமைச்சின் அதிகாரத்தின் கீழ் இந்த சட்டம் உள்ளதாகவும் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி குறிப்பிட்டார்.
முன்னராக, வாகன கட்டணத்தை தொடரும் மோசடி திட்டங்கள் குறித்து சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் ஸாஹிட் ஹாமீடி இதனை கூறினார். வாடகை விற்பனை ஒப்பந்தம் இன்னமும் அமலில் இருக்கும் நிலையில் அதன் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை விற்றால் அவர்களுக்கு 30 ஆயிரம் வெள்ளி வரையில் அபராதம் அல்லது மூன்று வருட சிறைதண்டனை அல்லது அவ்விரு தண்டனைகளும் 1967ஆம் ஆண்டு வாடகை விற்பனை சட்டத்தின் செக்க்ஷன் 38இன் கீழ் விதிக்கப்படலாம்.
வங்கியில் மாதக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அதன் உரிமையாளர்கள் தங்களது கார்களை மற்றவர்களிடம் அடமானம் வைப்பது, மற்றவர்களை வங்கியில் கடனை தொடர சொல்வது முதலான விவகாரங்கள் குறித்து உள்துறை அமைச்சிற்கு தெரியும். காரின் அசல் உரிமையாளர்களிடமிருந்து கார் அடமானமாக பெறுபவர்கள் அல்லது மாதாந்திர கடனை செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டவர்கள் வங்கியில் அக்கடனை தொடராத போதுதான் இந்த பிரச்னை எழுகிறது. இதனால், அக்காரின் அசல் உரிமையாளரின் பெயர் கருப்பு பட்டியலில் இடம்பெறுவதற்கான சூழல் ஏற்படுகிறது.
இது போன்ற விவகாரங்களை கார் திருட்டு வகையில் சேர்க்க முடியாது. காரணம், குற்றவியல் சட்டவிதி செக்க்ஷன் 378இன் கீழ் திருட்டு குற்றங்களுக்கான அம்சங்களை அது கொண்டிருக்கவில்லை. இருப்பினும், போலீஸ் அது தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு அதில் ஏமாற்று கூறுகள் இருக்குமானால் குற்றவியல் சட்டவிதி செக்ஷன் 420இன் கீழ் விசாரணையை மேற்கொள்ளும் என டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி கூறினார்.

