கோலாலம்பூர், நவ.18
அண்மையில் நிகழ்ந்த சாலை விபத்தால் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட வலியின் காரணமாக பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் ஓய்வெடுத்துவரும் அவரை நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும் அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இன்று துணைப்பிரதமரும் உள்துறையமைச்சருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடியும் அன்வாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தேசிய முன்னணியின் இருபெரும் தலைவர்கள் எதிர்கட்சி தலைவரான அன்வாரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது 14ஆவது பொதுத்தேர்தலுக்கான தேசிய முன்னணியின் வியூகங்களில் ஒன்றா என சில தரப்பினர்கள் கருதுகின்றனர்.
அதேவேளையில், அம்னோவில் ஒரு காலத்தில் பிளவு ஏற்பட்ட போது அன்வாருக்கு மிக பக்கபலமாக இருந்தவர் ஸாஹிட் ஹாமீடி. அவருக்காக ஸாஹிட் சிறை சென்ற வரலாறும் உள்ளது. ஆகையால், அன்வாரை ஸாஹிட் சந்தித்ததில் எந்தவொரு உள்நோக்கமும் இருக்காது என்றும் நட்பின் அடிப்படையில் அவர் அன்வாரை சந்தித்திருக்கக்கூடும் என சிலர் கூறுகின்றனர்.
எதுவாக இருப்பினும், நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அன்வாரை கட்சி பேதமின்றி நேரில் சந்தித்த நஜீப்பையும் ஸாஹிட்டையும் பாராட்டியாக வேண்டும்.
