Site icon அநேகன்

வெற்றியுடன் மீண்டும் பயணத்தைத் தொடங்கினார் பொக்பா!

மென்செஸ்டர், நவ.19 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 4 – 1 என்ற கோல்களில் நியூகாசல் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியில் போல் பொக்பா மீண்டும் களமிறங்கியது அந்த அணிக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது. மென்செஸ்டர் யுனைடெட்டின் வெற்றிக்கு பொக்பா முக்கிய பங்கை ஆற்றியுள்ளார்.

14 ஆவது நிமிடத்தில் நியூகாசல் யுனைடெட் அணியின் டுவைட் கேயில் போட்ட கோலினால், மென்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி அடைந்தது.எனினும் ஆட்டத்தை மெல்ல தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மென்செஸ்டர் யுனைடெட் முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தருவாயில் இரண்டு கோல்களைப் போட்டது.

அந்தோனி மார்சியல் முதல் கோலைப் போட்ட வேளையில், கிறிஸ் ஸ்மாலிங் இரண்டாவது கோலைப் போட்டார். இரண்டாம் பாதி ஆட்டத்தை முழுமையாக ஆக்கிரமித்த மென்செஸ்டர் யுனைடெட், 54 ஆவது நிமிடத்தில் போல் பொக்பா மூலம் மூன்றாவது கோலைப் போட்டது.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் நான்காவது கோலை 70 ஆவது நிமிடத்தில் ரொமெலு லுக்காகூ போட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மென்செஸ்டர் யுனைடெட் அணியில் மாற்று ஆட்டக்காரராக நுழைந்த சிலாதான் இப்ராஹிமோவிச்சுக்கு ரசிகர்கள் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

அனைத்துலக ஆட்டங்களுக்கான விடுமுறைக்கு முன்பாக செல்சியிடம் தோல்வி கண்ட மென்செஸ்டர் யுனைடெட் நியூகாசல் யுனைடெட்டை வீழ்த்தி தனது இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

Exit mobile version