பகாங், நவ. 19-
14ஆவது பொதுத்தேர்தல் அடுத்தாண்டு ஜூலையில் நடைபெறுவதற்கு சாத்தியம் இருப்பதாக டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் கூறியிருப்பது குறித்து மலேசியாவின் பிரதமர் இப்போது யார் என சிலாங்கூர் மந்திரி புசாரும் பி.கே.ஆர். கட்சியின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கேள்வியெழுப்பினார்.
தனது கணவர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு பதிலாக டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் இப்போது மலேசியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருப்பதாக அவர் கூறினார்.
பொதுத்தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போதுவரும் என நாம் அனைவரும் காத்திருக்கின்ற நிலையில் கடைசியில் ரோஸ்மா மன்சோர் அடுத்தாண்டு ஜூலையில் நடைபெறும் என கூறியிருக்கிறார். என்ன இது? யார் பிரதமர்? பிரதமர் பொதுத்தேர்தல் குறித்து அறிவிக்கவில்லை. ஆனால், அவரது துணைவியார் அது குறித்து அறிவித்திருக்கின்றார் என நேற்று பெராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அஸ்மின் அலி சொன்னார்.
அம்னோவின் மகளிர் பிரிவின் தேர்தல் ஆயுத்த பணிகளை பார்வையிட்ட பிறகு, 14ஆவது பொதுத்தேர்தல் அடுத்தாண்டு ஜூலையில் நடைபெறுவதற்கான சாத்தியத்தை தாம் மறுக்கவில்லை என டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.
எனக்கு தெரியாது. ஆனால், ஜூலைக்குள் பொதுத்தேர்தல் நடைபெறும் என கருதுகின்றேன். இது குறித்து அம்னோவின் உச்சமன்றம் எப்போதும் விவாதித்து வருகின்றது என ரோஸ்மா கூறியதாக டெ மலேசிய இன்சைட் இணையத்தள பதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்புடைய காலம் குறித்து நஜீப் தன்னுடைய கருத்தை கேட்டதாகவும் ஆனால், தாம் அரசியல்வாதி இல்லையென்றும் தமக்கு தெரியாது என்றும் தாம் கூறியதாக ரோஸ்மா குறிப்பிட்டிருந்தார்.
