Site icon அநேகன்

ம.இ.கா.வில் மீண்டும் இணையும் அந்த 4 பேர்!

கோலாலம்பூர், நவ. 21-

டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தின் தலைமைத்துவத்தை ஏற்க மறுத்து, தொடர் போராட்டங்களில் குதித்த ம.இ.கா.வின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலின் தீவிர ஆதரவாளர்களான ராமலிங்கம், ஹெண்ரி, டத்தோ ராஜூ, கே.பி. சாமி ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

 இன்று ம.இ.கா. தலைமையகத்தில் நடந்த மத்தியச் செயலவைக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகின்றது. முன்னதாக மத்திய செயலவை உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட வேளையில், உயர்மட்ட தலைவர்களில் ஒருவர் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

முன்னதாக கட்சியிலிருந்து விலகியிருந்த முன்னாள் உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ சோதிநாதன், 600 கிளைகளுடன் மீண்டும் கட்சியில் இணைந்தார். பின்னர் அவரை மத்திய செயலவையில் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் நியமித்தார்.

 இந்நிலையில் வெளியே உள்ள 100க்கும் மேற்பட்ட கிளைகளை எந்த நிபந்தனையும் இன்றி மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள டாக்டர் சுப்ரமணியம் விரும்புவதாகத் தெரிகின்றது. இந்த சூழ்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சந்தா செலுத்தாமல் இருக்கும் கிளைகள் தங்களின் சந்தாவை செலுத்தும் பட்சத்தில் அவர்கள் மீண்டும் கட்சியில் இணையலாம் என கூறப்படுகின்றது.

இதற்கு உயர்மட்ட தலைவர்களில் ஒருவர் இணக்கம் தெரிவிக்க மறுத்துள்ளார். ஆயினும் தமது முடிவில் உறுதியாக இருந்த டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம், கட்சிக்கு வெளியே இருந்த 600 கிளைகளை இணைத்துக் கொண்டதை போல, இதர கிளைகளையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென அவர் தீர்க்கமாக கூறிவிட்டதாக அனேகனுக்கு கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.

 முன்னதாக முன்னாள் பத்து தொகுதித் தலைவர் ராமலிங்கம், முன்னாள் கூட்டரசுப் பிரதேச துணைத் தலைவர் டத்தோ ராஜூ, பினாங்கை சேர்ந்த ஹெண்ரி உட்பட ம.இ.கா. அரசியல் வட்டத்தில் நன்கு அறிமுகமான கேபி சாமி என டத்தோஸ்ரீ பழனிவேலின் முன்னணி ஆதரவாளர்கள் கட்சியில் மீண்டும் இணைவதால் மஇகா ஒற்றுமை பாதையில் செல்லுமா? இந்த இணைப்பு பாதகத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Exit mobile version