Site icon அநேகன்

சாம்பியன்ஸ் லீக் – அப்போல் அணியை பந்தாடியது ரியல் மெட்ரிட்!

நிக்கோசியா, நவ.22 –

ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான ரியல் மெட்ரிட் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. செவ்வாய்கிழமை சைப்ரசின் நிக்கோசியா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் 6 – 0 என்ற கோல்களில் அப்போல் அணியை பந்தாடியது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரியல் மெட்ரிட்டின் முன்னணி தாக்குதல் நட்சத்திரங்களான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கரீம் பென்சீமாவும் தலா இரண்டு கோல்களைப் போட்டு அதிரடி படைத்துள்ளனர். இந்த வெற்றியின் வழி ரியல் மெட்ரிட் இரண்டாவது சுற்றுக்குத் தகுதிப் பெறுவதை உறுதிச் செய்துள்ளது.

23 ஆவது நிமிடத்தில் லுக்கா மொட்ரிச், ரியல் மெட்ரிட்டின் கோல் வேட்டையைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 15 நிமிடங்களில் 5 கோல்களைப் போட்டு அசத்தியது. 39 ஆவது நிமிடத்தில் பென்சீமா இரண்டாவது கோலைப் போட்ட வேளையில் 41 ஆவது நிமிடத்தில் நாச்சோ மொன்ரியல் கோல் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தினார்.

முதல் பாதி ஆட்டம் முடிவடையில் தருவாயில் மீண்டும் கரீம் பென்சீமா, ரியல் மெட்ரிட்டின் நான்காவது கோலைப் புகுத்தினார். இரண்டாம் பாதி ஆட்டத்தின் 49, 54 ஆவது நிமிடங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களைப் போட்டு ரியல் மெட்ரிட்டின் மிகப் பெரிய வெற்றியை உறுதிச் செய்தார்.

Exit mobile version