மென்செஸ்டர், நவ.22 –
2017/18 ஆம் பருவத்துக்கான ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி தனது 100 விழுக்காடு வெற்றியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. செவ்வாய்கிழமை நடைபெற்ற எப் பிரிவுக்கான ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 1 – 0 என்ற கோலில் ஹாலந்தின் ஃவெய்நோர்ட் அணியை வீழ்த்தியது.
ஆட்டத்தின் 88 ஆவது நிமிடத்தில் ரஹீம் ஸ்டேர்லிங் போட்ட கோலின் மூலம் மென்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது. எப் பிரிவில் முதலிடத்தை ஏற்கனவே உறுதி செய்து விட்ட மென்செஸ்டர் சிட்டி அணியில் நிர்வாகி பெப் குவார்டியோலா ஏழு மாற்றங்களைச் செய்திருந்தார்.
ஆட்டத்தை முழுமையாக ஆக்கிரமித்தாலும் 88 ஆவது நிமிடத்திலேயே மென்செஸ்டர் சிட்டி தனது வெற்றி கோலைப் பெற முடிந்தது. மென்செஸ்டர் சிட்டி ஆக கடைசியாக கலந்து கொண்ட 17 ஆட்டங்களில் தோல்வியே காணவில்லை என்பது குறிப்பிடதக்கது.
