பாரிஸ், நவ.23 –
ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் குழுப் பிரிவுக்கான ஆட்டங்களில் பிரான்சின் பி.எஸ்.ஜி எனப்படும் பாரிஸ் செயின் ஜெர்மைன் புதிய சாதனையைப் படைத்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற பி பிரிவுக்கான ஆட்டத்தில் பி.எஸ்.ஜி , 7 – 1 என்ற கோல்களில் ஸ்காட்லாந்தின் செல்டிக் அணியை வீழ்த்தியது.
இதுவரை பி பிரிவில் நடைபெற்ற ஐந்து ஆட்டங்களின் மூலம் பி.எஸ்.ஜி 24 கோல்களைப் போட்டுள்ளது. குழுப் பிரிவுக்கான ஆட்டங்களில் அதிக கோல்கள் அடித்த கிளப் என்ற பெருமையை பி.எஸ்.ஜி பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பொருசியா டார்ட்மூண்ட் குழுப் பிரிவுக்கான ஆட்டங்களில் 21 கோல்களைப் போட்டிருந்ததே சாதனையாக இருந்தது. இன்னும் ஓர் ஆட்டம் எஞ்சியுள்ள வேளையில் பி.எஸ்.ஜி – யின் கோல் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என கணிக்கப்படுகிறது.
செல்டி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெளசா டெம்பாலே போட்ட கோலால் பி.எஸ்.ஜி அதிர்ச்சி அடைந்தது.எனினும் செல்டிக் கோல் முனையை நோக்கி அதிரடி தாக்குதல்களை மேற்கொண்ட பி.எஸ்.ஜி , நெய்மார், எடின்சன் கவானி, கிலியன் எம்பாப்பே, டானி ஆல்வேஸ், மார்க்கோ வெராட்டி மூலம் 7 கோல்களைப் போட்டு செல்டிக்கை புரட்டி எடுத்தது.
இதுவரை நடைபெற்ற ஐந்து ஆட்டங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ள பி.எஸ்.ஜி 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 12 புள்ளிகளுடன் பாயேர்ன் மூனிக் இரண்டாவது இடத்தில் உள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி அலியான்ஸ் அரேனாவில் நடைபெறவுள்ள குழுப் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் பி.எஸ்.ஜி ஜெர்மனியின் பாயேர்ன் மூனிக்கை சந்திக்கவுள்ளது.
