Site icon அநேகன்

நல்லது செய்யவரும் எதிர்க்கட்சி தலைவர்களை தடுப்பது சரியா?

பெஸ்தாரிஜெயா, நவ.23-

அண்மையில் பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு பேருந்து கட்டணத்திற்கான ரசீதுகளை கொடுக்க வந்த சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான வீ.கணபதிராவ் பள்ளியினுள் செல்ல அனுமதிக்கப்படாதது குறித்து பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

குறிப்பாக, தமிழ்ப்பள்ளிகளில் அரசியல் தலையீடுகள் இருப்பது ஏமாற்றமளிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். தமிழ்ப்பள்ளிகள் மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பள்ளியினுள் உதவிகளை வழங்க மறுப்பது நியாயமாகுமா?

பொதுமருத்துவமனைகளும் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ளது. அதற்காக எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதற்காக அவர்களுக்கு சிகிச்சையளிக்க மறுப்பு தெரிவிக்கப்படுகின்றதா? பள்ளிகளில் மட்டும் இத்தகைய கொள்கை முரண்பாடு ஏன்? என அவர்கள் கேள்வியெழுப்பினர்.

இதனிடையே, இவ்விவகாரம் குறித்து சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவை அனேகன்.கோம் தொடர்புக்கொண்ட போது, பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெருத்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

இப்பள்ளி மட்டுமல்ல. இன்னும் சில பள்ளிகளில் எதிர்கட்சியை சேர்ந்த இந்திய தலைவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாண்டு பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளிக்கு 50 ஆயிரம் வெள்ளியை வழங்கினோம். விரைவில் 30 ஆயிரம் வெள்ளியை வழங்கவுள்ளோம். சிலாங்கூரை எதிர்க்கட்சிகள் கைப்பற்றியதிலிருந்து தமிழ்ப்பள்ளிகளுக்கு லட்சக்கணக்கில் நிதியுதவியை அளித்துள்ளோம்.

நிதிகளுக்காக மட்டுமே சிலாங்கூர் அரசை நாடுகின்றனர். ஆனால், மானியங்களை கொடுக்க வரும்போது எங்களுக்கு தகுந்த மரியாதை வழங்கப்படுவதில்லை. இன்னும் எத்தனை காலத்திற்கு இந்நிலை தொடர்கின்றது என பார்ப்போம்.

இவ்விவகாரத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களை குறை கூற விரும்பவில்லை. காரணம், அவர்களும் ஒரு வித அச்சத்தில்தான் இருக்கின்றனர். பினாங்கில் ஒரு பள்ளியில் எதிர்க்கட்சியிடமிருந்து நிதியை பெற்றதற்காக ஆசிரியர் ஒருவர் பணியிடம் மாற்றப்பட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தண்டிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

எதுவாக இருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளுக்கான உதவிகளை சிலாங்கூர் அரசாங்கம் முழுமனதாக செய்யும். எங்கிருந்து உதவிகள் வழங்கப்படுகின்றன என்பது முக்கியமல்ல. சம்பந்தப்பட்ட தரப்பினரை சென்றடைகின்றதா என்பதுதான் மிக முக்கியம் என கணபதிராவ் கூறினார்.

Exit mobile version