Site icon அநேகன்

அஜித்தின் அடுத்த படம் விசுவாசம்!

சென்னை, நவ, 23

தமிழ்ச்சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தல அஜீத்தின் அடுத்த திரைப்படத்தையும் சிறுத்தை சிவா இயக்குவது உறுதியாகிவிட்ட நிலையில், அத்திரைப்படத்திற்கு விசுவாசம் என பெயரிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சிறுத்தை சிவாவுடன் இணைந்து அஜித் நடித்த முதல் திரைப்படமான வீரம் அனைவரது பாராட்டையும் பெற்றதோடு வசூலிலும் களை கட்டியது. அதன் பிறகு மீண்டும் இவர்கள் இருவர் கூட்டணியில் உருவாகிய வேதாளம் திரைப்படமும் அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதன் பிறகு அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தப்போது, அவர் மீண்டும் சிறுத்தை சிவாவுடன் கைக்கோர்த்தார். ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையான திரைப்படம் என கூறப்பட்ட விவேகத்தை அஜீத் ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் வருமான ரீதியில் அத்திரைப்படம் சாதனை படைக்கவில்லை.

ஜனவரி மாதம் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு, 2018 தீபாவளியன்று திரைப்படம் வெளியாகும்’ என்று தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். படத்தில் நடிக்கும் பிற நடிகர் – நடிகைகளின் விவரமும் டெக்னிக்கல் டீமின் விவரமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைப்பார் என கூறப்படுகிறது. விவேகம் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராத பட்சத்தில் அந்த இழப்பை ஈடு கட்டும் வகையில் மீண்டும் சத்யஜோதி பிலிம்சின் தயாரிப்பில் நடிக்க அஜித் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறுத்தை சிவாவுடன் இணைந்து பணியாற்றுவதை அஜித் நிறுத்த வேண்டுமென அதன் ரசிகர்கள் வெளிப்படையாகக் கூறிய நிலையில், மீண்டும் அவருடனே இணைந்துள்ளார். இது யார், யார் மீது வைத்துள்ள விசுவாசம் என்று தெரியவில்லை. இப்போது இத்திரைப்படத்தின் தலைப்பும் விசுவாசம் என தமிழ் திரைப்பட விமர்சகரும் எழுத்தாளருமான ஸ்ரீதர் பிள்ளை தமது டுவிட்டர் அகப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அஜித் மீது நம்பிக்கை வைத்து, விவேகம் திரைப்படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரித்தது. ஆனால் அந்தத் திரைப்படம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தயாரிப்பாளருக்கு விசுவாசத்தை காட்டும் வகையில் மீண்டும் அவருடனே அடுத்த திரைப்படத்தையும் அஜித் தொடர்கிறார் என கூறுகிறார்கள். தல எப்போதுமே விசுவாசமானர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்.

Exit mobile version