மொனாக்கோ, ஜூலை.22 –
பிரான்சின் மொனாக்கோ நகரில் நடைபெற்று வரும் வரை லீக் திடல் தடப் போட்டியில் உலகின் அதிவேக ஓட்டக்காரரான ஜமைக்காவின் உசேன் போல்ட் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார்.
9.95 வினாடிகளில் 100 மீட்டரைக் கடந்து உசேன் போல்ட் தங்கம் வென்ற வேளையில், அமெரிக்காவின் இசையா யாங் இரண்டாவது இடத்தையும் தென் ஆப்பிரிக்காவின் அகானி சிம்பினே மூன்றாவது இடத்தையும் பெற்றனர். கடந்த சில ஆண்டுகளாக முதுகுப் பகுதியில் காயத்தால் அவதியுற்று வந்த உசேன் போல்ட், மொனாக்கோ போட்டிக்கு முன்னதாக ஜெர்மனியில் சிகிச்சை பெற்றார்.
அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள உலகத் திடல் தடப் போட்டியுடன் அனைத்துலக ஓட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ள உசேன் போல்ட் கடைசி முறையாக வைர லீக் போட்டியில் கலந்து கொண்டார். அதேவேளையில் இந்த ஆண்டில் முதல் முறையாக, 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தை உசேன் போல்ட் பதிவுச் செய்துள்ளார்.
