கோலாலம்பூர், ஜூலை.22 –

பகாங் கால்பந்து அணியின் பயிற்றுனர் டோலா சாலேவுக்கு 18 மாதங்கள் தடையும், 30 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படுவதாக மலேசிய கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

மலேசிய சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் நடுவரின் தரம் குறித்து தொடர்ந்து கடும் விமர்சனங்களை தெரிவித்ததால் டோலா சாலேவுக்கு இந்த தண்டனை வழங்கப்படுவதாக மலேசிய கால்பந்து சங்கத்தின் ஒழுங்கு குழு அறிவித்துள்ளது. இந்த தண்டனை வெள்ளிக்கிழமை முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய கால்பந்து சங்கத்தின் ஒழுங்கு விதிகளை டோலா சாலே மீறியுள்ளதாக அச்சங்கத்தின் கட்டொழுங்கு குழு தலைவர் டத்தோ பல்ஜிட் சிங் தெரிவித்தார். மலேசிய கால்பந்து சங்கத்தின் அனுமதியின்றி ஊடகங்களில் டோலா சாலே நடுவர்களின் தரத்தை கடுமையாக விமர்சித்துள்ளதாக பல்ஜிட் தெரிவித்தார்.

டோலா சாலேவின் இந்த செயல் மலேசிய கால்பந்து சங்கத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பல்ஜிட் தெரிவித்தார். முதல் கட்டமாக ஜூலை 21 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டில் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி வரை 9 மாதங்கள் தடை விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அதேவேளையில் ஏப்ரல்;21 முதல் 2019 ஆம் ஆண்டில் ஜனவரி 20 ஆம் தேதி வரைக்குமான இரண்டாம் கட்ட தண்டனை ஒத்தி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த தண்டனைக்கு எதிராக டோலா சாலே மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் பல்ஜிட் தெரிவித்துள்ளார்.