மெட்ரிட், டிச.12 

லிவர்புல் அணியின் மத்திய திடல் ஆட்டக்காரர் முஹமட் சாலாவை விலைக்கு வாங்க ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் ஆர்வம் கொண்டுள்ளதாக ஸ்பெயின் விளையாட்டு சஞ்சிகையான டோன் பலோன் தெரிவித்துள்ளது. முஹமட் சாலாவைப் பெறுவதற்காக ரியல் மெட்ரிட் பெரும் தொகையுடன் தாக்குதல் ஆட்டக்காரர் லுக்காஸ் வாஸ்குவிசையும் விற்க திட்டமிட்டுள்ளதாக அந்த சஞ்சிகை கூறுகிறது.

26 வயதுடைய சாலா, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சுவிட்சர்லாந்தின் பேசல் கிளப்பில் இருந்து செல்சியில் இணைந்தார். எனினும் அப்போதைய நிர்வாகி ஜோசே மொரின்ஹோவின் நம்பிக்கையைப் பெற தவறியதால்,  இத்தாலியின் ஏ.எஸ் ரோமா கிளப்புக்கு விற்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த கோடை காலத்தில் பெரும் தொகையில் ரோமா கிளப்பில் இருந்து லிவர்புல் கிளப்பில் இணைந்த சாலா இதுவரை 19 கோல்களைப் போட்டு அதிரடி படைத்துள்ளார். இந்த பருவத்தில் லிவர்புல் அணியின் அதிரடி தாக்குதல் ஆட்டத்துக்கு சாலா தலைமையேற்றுள்ளார்.

ஸ்பெயின் லா லீகாவில் நான்காவது இடத்தில் உள்ள ரியல் மெட்ரிட் தனது தாக்குதல் பகுதியை மேலும் வலுப்படுத்த முஹமட் சாலாவை குறி வைத்துள்ளது. ஆனால் முஹமட் சாலாவை லிவர்புல் எளிதில் விட்டு கொடுக்காது என கூறப்படுகிறது.