கோலாலம்பூர், டிச.14 – 

பி.கே.ஆர் கட்சியின் பொதுத் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் , அரசியல் கைதி என்று கூறப்படுவதை தேசிய போலீஸ் படையின் முன்னாள் தலைவர் டான் ஸ்ரீ முசா ஹசான் முற்றாக மறுத்துள்ளார்.

மலேசியாவில் அரசியல் கைதி என்ற சொல்லுக்கே இடமில்லை என அவர் கூறினார். இசா எனப்படும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணையின்றி ஒருவரை தடுத்து வைக்க முடியும் என்றாலும் சம்பந்தப்பட்ட அந்த நபர் மீண்டும் அரசியல் களம் காண வாய்ப்புள்ளதாக மூசா ஹசான் தெரிவித்தார்.

மலேசியாவில் இசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்,  பிற்காலத்தில் அமைச்சர் , துணை அமைச்சர்களாக பதவியேற்றிருப்பதையும் அவர் சிட்டி காட்டினார். எனவே , அன்வார் இப்ராஹிம் அரசியல் கைதியாக சிறைப்பிடிக்கப் பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் , அமெரிக்காவின் நீதிபதி கிம்பர்லி மோட்லி தெரிவித்திருக்கும் கருத்து தவறானது என்றும் மூசா ஹசான் குறிப்பிட்டார்.

மியான்மாரில் நடந்த ராணுவ புரட்சியின்போது ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டார். தென் ஆப்ரிக்காவில் நிற வெறி கொள்கையை எதிர்த்து போராடிய முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவும் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அன்வாரின் நிலை வேறு என மூசா ஹசான் தெரிவித்தார்.