கோலா நெருஸ், ஜூலை 22-
இவ்வாண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் மேலும் 50 ஏ.இ.எஸ் எனப்படும் தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு கேமராக்களை சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) பொருத்தவிருப்பதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ நட்ஸ்ரி சிரோன் தெரிவித்தார்.

சாலை விபத்துகளில் மரணச் சம்பவங்களின் விகிதத்தைக் குறைக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த கேமராக்களைப் பொருத்த இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை 21 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

சமிக்ஞை விளக்கை மீறிச் செல்லும் சம்பவம் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதுபற்றி வலியுறுத்துவதில் ஜேபிஜே முக்கியத்துவம் கொடுக்கும்.
மரணச் சம்பவத்திற்கு வழி வகுக்கும் 7 விதமானக் குற்றத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள்தான் அதிக எண்ணிகையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சோதனை நடவடிக்கைகளை ஒவ்வொரு நேரத்தில் ஜேபிஜே மேற்கொண்டு வந்தாலும் கூட சமிக்ஞை விளக்கை மீறிச் செல்லும் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி தொடங்கி அதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதில் சமிக்ஞை விளக்கை மீறிச் செல்லும் மோட்டர் சைக்கிள் ஓட்டுநர்களுக்குக் கூடியபட்சம் வெ.300 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு மீறிச் சென்றதால் இந்த மாதத்தில் மட்டும் 300 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மரணமுற்ற வேளையில் 299 பேர் காயமுற்றுள்ளதாக நட்ஸ்ரி சிரோன் கூறினார்.