பெட்டாலிங் ஜெயா, டிச.14-
மூன்றாம் படிவ மாணவர்களுக்காக கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியிருக்கும் பி.டி.3 தேர்வு எதிர்காலத்தில் நிலவக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் முழுமைப்பெற்ற மாணவர்களை உருவாக்குவதே அதன் நோக்கமென ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா தெரிவித்தார்.

மாணவர்களிடையே சிறந்த கல்வி அடைவுநிலை, சிந்தனை திறன், படைப்பாற்றல் முதலானவற்றை விதைக்கும் நோக்கில் இத்தேர்வு முறை அமைந்துள்ளதால் மாணவர்கள் தங்களின் அடைவுநிலையை பற்றி கவலைப்படக்கூடாது என பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் பி.டி.3. தேர்வு முடிவுகளை பெற்ற மாணவர்களின் முன்னிலையில் பேசிய அவர் கூறினார்.

மாணவர்கள் தங்களின் அடைவுநிலையை பற்றி கவலைப்படக்கூடாது. இந்த தேர்வு ஏக்களை மட்டுமே சேர்ந்தது அல்ல. மாறாக, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள கூடிய மாணவர்களை இப்பொழுதே தயார்படுத்துவதாகும். 2030ஆம் ஆண்டில் என்னென்ன வேலைகள் இருக்கக்கூடும் என்பது இப்போது தெரியாது. ஆனால், அக்காலக்கட்டத்தில் வரவிருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை செய்யக்கூடிய ஆற்றலை கொண்டிருக்கும் வகையில் இப்பொழுதிலிருந்தே அதற்கான தளத்தை அரசாங்கம் ஏற்படுத்தி தந்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னால் இப்போது இருக்கும் உபர் சேவையை பற்றி யாருக்கும் தெரியாது. எதிர்காலத்தில் நம் நாட்டில் ஓட்டுநர்கள் இன்றி சுயமாக உபர் சேவையை வழங்கக்கூடிய நிலை கண்டிப்பாக வரும். ஆகையால், சிந்திக்கும் ஆற்றலும் பல்வகை திறன்களையும் கொண்ட மாணவர்களை இந்த பி.டி.3. உருவாக்க இலக்கு கொண்டுள்ளது. கல்வி, மனோவியல் பயிற்சி, புறப்பாட நடவடிக்கை, பள்ளி மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பி.டி.3. தேர்வின் கீழ் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றது.

ஆகையால், தேர்வு முடிவுகளை பெற்ற மாணவர்கள் அடுத்ததாக 4ஆம் படிவத்தில் கவனம் செலுத்த வேண்டுமென சுரேன் கந்தா கேட்டுக்கொண்டார். இதனிடையே, இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் மற்றொரு இணை இயக்குநர் பிரகாஷ்ராவ், மாணவர்கள் தாங்கள் விரும்புகின்ற துறையை தேர்தெடுப்பதற்கான வாய்ப்பை பி.டி.3. தேர்வு வழங்குவதாகும் சிறந்த அடைவுநிலையை பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.