நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை கடற்படை, கடலோர காவல்படையினர் மீட்டு வருகிறார்கள். புயலில் சிக்கி மாயமான வர்களின் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மராட்டியம், கோவா, குஜராத் மற்றும் லட்சத்தீவுகளில் கரை ஒதுங்கினர். அவர்களில் குமரி மீனவர்கள் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள்.

இவர்களை தவிர குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்று கரை திரும்பாத மீனவர்கள் 463 பேர் என மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறி உள்ளது.

இதற்கிடையே குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்று இன்று வரை கரை திரும்பாமல் உள்ள மீனவர்கள் எண்ணிக்கை 480 என்று தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் பாதிரியார் சர்ச்சில் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் இருந்து ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களில் 104 பேர் பலியாகி இருக்கலாம் என்று கருதுகிறோம். இதுவரை கரை திரும்பிய மீனவர்கள் அளித்த தகவலை திரட்டி உள்ளோம்.

அதன்படி பலியானவர்கள் எண்ணிக்கை நீரோடி துறையில் 37, மார்த்தாண்டம் துறை 5, வள்ளவிளை 3, இரவிபுத்தன் துறை 5, சின்னத்துறை 44, தூத்தூர் 3, பூத்துறை 4, இரயுமன்துறை 3 பேர் என மொத்தம் 104 பேர் பலியாகி இருக்கலாம் என உறுதியாக நம்புகிறோம். பலியான மீனவர்களின் உடல்கள் ஆழ்கடலில் மிதப்பதாக கரை திரும்பிய மீனவர்கள் கூறுகிறார்கள். கேரளாவில் ஆழ்கடலில் மிதக்கும் பிணங்கள் மீட்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் இப்பணி நடைபெறவில்லை. இங்கும் கடலில் மிதக்கும் பிணங்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மீனவர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நிவாரண நிதியையும் அதிகப்படுத்தினார். அவரது உறுதி மொழியை ஏற்று மீனவ அமைப்புகள் போராட்டத்தை கைவிட்டுள்ளன. அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பிணங்களை மீட்டு வந்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.