கால்பந்து விளையாட்டை மேம்படுத்த ஏர் ஆசியா-எம்.பி.பி.ஜே. புரிந்துணர்வு ஒப்பந்தம்!

0
3

பெட்டாலிங் ஜெயா, டிச.14-
கிளானா ஜெயாவிலுள்ள பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் (எம்.பி.பி.ஜே) அரங்கத்திற்கு புதுப்பொலிவை வழங்கும் நோக்கில் மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியாவும் எம்.பி.பி.ஜே. மன்றமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக மாநிலத்தின் கால்பந்து விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் மையமாக இது திகழும் என எம்.பி.பி.ஜேவின் டத்தோ பண்டார் டத்தோ முஹம்மட் அசிஸி முஹம்மட் ஜைன் தெரிவித்தார்.

அதோடு, இதன் வாயிலாக, எம்.பி.பி.ஜே.விலுள்ள குடியிருப்பாளர்கள் கால்பந்து துறையை மேம்படுத்தும் வகையில் அவர்களின் பங்களிப்பு இருக்கும். இதற்கு முன்பு எம்.பி.பி.ஜே. ஒரு காலத்தில் சிறப்பான கால்பந்து அணியை கொண்டிருந்தாக நமக்கு தெரிவிக்கப்பட்டது. ஆகையால், ஏர் ஆசியாவுடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பெட்டாலிங் ஜெயா ரேஞ்சர்ஸ் கால்பந்து அணி மீண்டும் கால்பந்து விளையாட்டு துறையில் ஜொலிப்பதற்கு வித்திடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக எம்.பி.பி.ஜே. தலைமையகத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டத்தோ முஹம்மட் அசிஸி முஹம்மட் ஜைன் கூறினார்.

முன்னராக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்ணான்டேஸ், எம்.பி.பி.ஜே. சார்பில் முஹம்மட் அசிஸி ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக பி.ஜே. ரேஞ்சர்ஸ் அணிக்கு புதுபொலிவை ஏற்படுத்தவும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும் ஏர் ஆசியா நிறுவனம் 50 லட்சம் வெள்ளியை வழங்குகின்றது. இதனிடையே, டான்ஸ்ரீ டோனி பெர்ணான்டேஸ் கூறுகையில், மாநில கால்பந்து துறையை மேம்படுத்தும் நோக்கில் ஏர் ஆசியாவின் சமூக கடப்பாட்டு திட்டத்தின் வாயிலாக இந்த நிதி அளிக்கப்படுவதாக கூறினார்.