கோலாலம்பூர், டிச.16-

நாட்டில் அரசாங்கம் ஏற்பாடும் செய்யும் நிகழ்ச்சிகளில் இந்தியர்களின் பாரம்பரிய நடனமான பரதத்தை,  பிற இனத்தைச் சேர்ந்த நடன கலைஞர்கள்  ஆடுவதற்கு இடாம் எனப்படும் மலேசிய இந்திய நடனக் கலைஞர்கள் சங்கம்  எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாக விளங்கும் பரதத்தை மற்ற இனத்தவர்கள் கற்று கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை என இடாம்  தலைவர் மணிமாறன் சுப்பையா கூறினார். ஆனால் முறையாக கற்று தேர்ந்த பரத கலைஞர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சிகளில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் சொன்னார்.

தற்போது நாட்டில் அரசாங்கம் ஏற்பாடும் செய்யும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இந்திய இனத்தைச் சார்ந்திராத நடன கலைஞர்கள் பரதம் என்ற பெயரில் தலையை ஆட்டி வித்தைகளை செய்து கொண்டிருப்பதாக மணிமாறம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். பரதக் கலையை முழுமையாக கற்றுக் கொள்வதற்கு ஆறு அல்லது 7 ஆண்டுகள் வரை பிடிக்கும்.

பரத கலையில் உள்ள ஒவ்வொரு அசைவுகளுக்கும் அர்த்தம் உள்ளது. எனவே பரதம் தெரிந்த கலைஞர்களை மட்டுமே அரசாங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க தேசிய கலை, கலாச்சாரத் துறை ஆவன செய்ய வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

இந்தியப் பாரம்பரிய நடனங்களை பிற இனத்தவர்கள் ஆடுவது பெருமையாக இருந்தாலும் 90 விழுக்காடு வரை அவர்கள் தவறாக, முறையற்று நடனம் ஆடுவது வேதனையளிக்கிறது. கலை, கலாச்சார, பண்பாட்டுத் துறையில் இருக்கும் இந்திய பிரதிநிதிகள் இதுகுறித்து கவனித்தார்களா என்று தெரியவில்லை. இந்திய பாரம்பரிய நடனங்களை நாம் முறையாக ஆட வேண்டும். அவை தெய்வீக கலை. அது ஒரு போதும் முறையற்று இருக்கக் கூடாது.

இதன் தொடர்பில் அடுத்த ஆண்டு தொடங்கி இடாம், மாநிலம் தோறும் உள்ள தேசிய கலை, கலாச்சார துறைகளிடம் மகஜர் ஒன்றை சமர்பிக்கும் என்றும் அவர் சொன்னார்.