பெட்டாலிங் ஜெயா, ஜூலை 22

கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் பதவிக்காலம் வழக்கத்துக்கு மாறாக நீட்டிக்கப்பட்டிருப்பது நீதித்துறை மீதுள்ள நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் பிரதமரும் நம்பிக்கை கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

அவர்கள் பதவிக்குப் பொருத்தமானவர்களாக இருந்தாலும் அவர்களது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட நடைமுறை சரியானதல்ல என அவர் கூறினார். இவ்விவகாரத்தில் அரசாங்கம் சிறப்புச் சலுகை காட்டியுள்ளது தெளிவாகவே தெரிவதாக தலைமை நீதிபதி டான்ஸ்ரீ முகமட் ரவுஸ் ஷரிப்பும் மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டான்ஸ்ரீ சுல்கிப்ளி அகமட் மக்கினுடினும் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து டாக்டர் மகாதீர் கருத்துரைத்த போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த நியமனம் அரசியலமைப்புக்குப் புறம்பான நியமனம் என பலர் குறை கூறி வந்தாலும் அரசாங்கம் தனது நியமனத்தை தற்காத்து வருகின்றது.  பணி ஒய்வுபெற்ற கூட்டரசு நீதிபதி கோபால் ஸ்ரீராம், தலைமை நீதிபதி பதவியை ஏற்பதற்கு வேறு நீதிபதிகள் இருப்பதாக கூறியுள்ளார். மலாயா தலைமை நீதிபதி அகமட் மா‘ரோப், சபா, சரவாக் தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலாஞ்சும், கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஹசான் லா முதலானோரு அப்பொறுப்பிற்கான தகுதி இருப்பதாக துன் டாக்டர் மகாதீர் கூறினார்.