ஷா ஆலம், டிச. 21-
கிள்ளான், கம்போங் ஜாவா மற்றும் பண்டார் புத்ரி ஆகிய இடங்களில் இரு வீடுகளில் போலீஸ் மேற்கொண்ட அதிரடி சோதனையில் போதை பொருள்களை பொட்டலமாக தயார்செய்து வந்த இரு உள்நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று மாலை மணி 4.00 அளவில் பண்டார் புத்ரியில் உள்ள வீடொன்றில் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்ட முதல்கட்ட சோதனையில் 8976.4 கிராம் எடை கொண்ட ஷாபூ வகைப் போதை பொருட்களும் பொருட்களை பொட்டலம் செய்ய பயன்படுத்தும் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ அப்துல் ரஷிட் அப்துல் வஹாப் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் வெ.628,348,00 மதிப்புடையவை என்றும் அது இங்குள்ள சந்தையில் விற்பனைக்கு தயார் படுத்தப்பட்டவை என நம்பப்படுவதாக அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து, கம்போங் ஜாவாவில் மேற்கொண்ட இரண்டாம் கட்ட சோதனையில் வீடொன்றில் 54,382 மில்லி லிட்டர் அளவில் மெத் எண்ணெய்யும் 1,051 கிராம் ஷாபூ வகைப் போதை பொருள் உட்பட இராசயன பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது என அப்துல் ரஷிட் தெரிவித்தார்.

அதே வேளையில், மஸ்டா ரக காரும், வெ.80,000 ரொக்க பணமும், வெ.9500 மதிப்புள்ள இரு தங்கச் சங்கலிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இரு ஆடவர்களும் 37 மற்றும் 40 வயதுடையவர்களாவர். 1952ஆம் ஆண்டு அபாயகர போதை பொருள் சட்டம் பிரிவு 39பி இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் டிசம்பர் 27ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டார்.