முகப்பு > சமூகம் > பெங்களூரு பயணமாகும் எஸ்.எம்.சி. பேட்மிண்டன் வெற்றியாளர்கள்!
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

பெங்களூரு பயணமாகும் எஸ்.எம்.சி. பேட்மிண்டன் வெற்றியாளர்கள்!

கோலாலம்பூர், டிச. 21-

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் யூத் கோர் ஏற்பாட்டில் நடந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேட்மிண்டன் போட்டி அண்மையில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.  இந்தப் போட்டியில் காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றிக் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.

இந்நிலையில் இவ்வாரம் ஞாயிற்றுக்கிழமை அதாவது டிசம்பர் 24ஆம் தேதி வெற்றி பெற்ற காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் 1 ஆசிரியரும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரும் இந்தியா பெங்களூரு நோக்கி பயணமாகின்றனர்.

உலகின் தலைசிறந்த பேட்மிண்டன் பயிற்சிக் கூடங்களில் ஒன்றாக விளங்கும் பிரகாஷ் படுகோனே பேட்மிண்டன் பயிற்சி கல்லூரியில் இந்த மாணவர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். அதோடு பேட்மிண்டனில் உள்ள நுணுக்கங்கள் குறித்தும் இவர்கள் அறிந்து கொள்வார்கள். ஞாயிற்றுக்கிழமை ஏர் ஆசியா விமானம் மூலம் இவர்கள் பெங்களூரு நோக்கி பயணமாகின்றார்கள்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் பேட்மிண்டன் விளையாட்டின் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த பேட்மிண்டன் போட்டி அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கின்றது என ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் யூத் கோரின் தலைவரும் இணை இயக்குநருமான சுரேன் கந்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் படுகோனே பேட்மிண்டன் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி அவர்களின் அடுத்தகட்டப் பயணத்திற்கு உறுதுணையாக அமையுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதோடு வரும் காலங்களில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பேட்மிண்டன் போட்டி தொடருமென சுரேன் கந்தா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன