சென்னை:

2ஜி வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழி எம்.பி. அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

“2ஜி வழக்கில் விடுதலை ஆனது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் நீதி வென்றுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். இறுதியாக தி.மு.க. மீதும், மற்றவர்கள் மீதும் அடிப்படையற்ற, உண்மைக்கு புறம்பாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் களையப்பட்டுள்ளது. இது ஒரு பொய்யான வழக்கு என்பது இந்த தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

2ஜி வழக்கில் இருந்து விடுதலை ஆவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனெனில் இந்த வழக்கில் ஒன்றும் இல்லை. தற்போது நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. நான் ஏற்கனவே பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யப் போவதில் எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு பக்கபலமாக நின்ற எனது குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக கணவர் அரவிந்தன், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள், கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

 

டெல்லி புறப்படும் முன்பு எனது தந்தை கருணாநிதியை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் தைரியமாக இரு என்றார். எனது அண்ணனும், கட்சி செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தீர்ப்புக்கு பிறகு என்னுடன் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தும், மகிழ்ச்சியும் தெரிவித்தார்.

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தியும் எனக்கு வாழ்த்து கூறினார். நம் அனைவருக்கும் இது மிகப்பெரிய நாள் என்றார். கட்சியில் (தி.மு.க.வில்) நான் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை. தற்போதுள்ள நிலையில் மேலும் தீவிர அரசியலில் ஈடுபட விரும்புகிறேன்”.

இவ்வாறு அவர் கூறினார்.