கோலாலம்பூர், ஜூலை 23-
மலேசி
யாவில் உள்ள முதன்மை இயக்கங்களில் ஒன்றாக விளங்கும் மலேசிய திராவிடர் கழகத்திற்கு (மதிக) அரசு மானியம் கிடைக்கவில்லை என அக்கழகத்தின் தலைவர் எப். காந்தராஜ் வருத்தம் தெரிவித்தார். குறிப்பாக 2016ஆம் ஆண்டு தாம் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றது முதல், செடிக்கில் பல முறை மானியத்திற்கான விண்ணப்பம் செய்தோம். ஆனால் எந்த பதிலும் இல்லை. குறிப்பாக இளைஞர், மகளிர்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான விண்ணப்பம் செய்தும், மானியம் வழங்கப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று காலை ம.இ.கா. தலைமையகம் நேதாஜி மணடபத்தில் நடந்த மலேசிய திராவிடர் கழகத்தின் 71ஆவது பொதுக்குழுவில் உரையாற்றிய போது இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார். திராவிடர் கழகம் பழுத்த அனுபவம் பெற்ற கழகமாகும். இதுவரையில் இந்தியர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறான திட்டங்களை செயல்படுத்தி அதில்
வெற்றியும் பெற்றுள்ளோம். ஆனால் தற்போது மானியம் வழங்கப்படாமல் இருப்பது பெரிய ஏமாற்றத்தைத் தருகின்றது என்றார் அவர்.
முன்னதாக, மலேசிய திராவிடர் கழகம் பெரியார் குறித்து பேசக்கூடாது என மலேசிய நாம் தமிழர் அமைப்பு கூறி வருவதையும் அவர் வன்மையாகச் சாடினார். ‘‘எந்த சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள். என காந்தராஜ் கூறினார்.
மலேசியாவில் பகுத்தறிவுச் சிந்தனையை விதைத்தவர் பெரியார்தான். அவரின் சிந்தனையை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டுமென மேலவைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட டத்தோ கணேசன் கூறினார்.
அதோடு திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சிக்காக 6000 வெள்ளியை டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த பொதுக்குழுவின் கழகத்தின் மேம்பாட்டிற்காகவும், சமுதாயத்திற்காகவும் உழைத்த மு.சு. மணியம், நாரண அய்யாவு, அபேஸ், ஆகியோருக்கு இந்நிகழ்ச்சியில் சிறப்புச் செய்யப்பட்டது.
