தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ரிஞ்சிங், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் வழங்கிய உதவிக்கரம்!

0
4

செமினி, டிச.23-
சமூகநல நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் ரிஞ்சிங் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் நிர்வாகம் டி.எஸ்.எஸ். பாதுகாவலர் சேவை நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி எஸ்.கே.நாயருடன் இணைந்து சுமார் 12 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு காலணி, பள்ளி சீருடை, புத்தகப்பை உள்ளிட்ட பள்ளி உபகரண பொருட்களையும் குறிப்பிட்ட தொகையையும் வழங்கியது.

இது குறித்து ரிஞ்சிங் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் விஜயகுமார் கூறுகையில், இந்த உதவியை ஆலய நிர்வாகம் முதல்முறையாக ஏற்பாடு செய்தாலும் இதர சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

உதவிகள் வழங்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் ரிஞ்சிங் தோட்ட தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களாவர். வசதி குறைந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இந்த உதவியை வழங்கியுள்ளோம். இதன் வாயிலாக, அந்த மாணவர்களின் பெற்றோர்களின் சுமையைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த உதவியை வழங்குவதற்கான ஆதரவை எங்களுக்கு வழங்கிய எஸ்.கே.நாயர், அவருடைய மருமகனும் டி.எஸ்.எஸ். பாதுகாவலர் சேவை நிறுவனத்தின் இயக்குநருமான தனபாலன் ஆகிய இருவருக்கும் ஆலயத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், அடுத்தாண்டு தொடங்கி இந்த ஆலயத்தில் தேவார வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இதுவரையில் சுமார் 30 மாணவர்கள் முன்கூட்டியே பதிந்துக்கொண்டுள்ளனர். தேவார வகுப்பில் இணைய விருப்பம் கொண்டிருக்கும் இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் எங்களிடம் வந்து பதிந்துக்கொள்ளலாம். இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களிடையே அம்மதம் தொடர்பான விளக்கத்தையும் தெளிவையும் ஏற்படுத்தும் நோக்கில் இந்த வகுப்பை ஏற்பாடு செய்துள்ளோம் என விஜயகுமார் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தனபாலன் பள்ளி உபகரணம் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆலய செயலாளர் கன்னியசீலன், துணைச்செயலாளர் நாகேந்திரன், பொருளாளர் இளங்குமார், கணக்காய்வாளர் சாம்பசிவம் மற்றும் ஆலய நிர்வாக குழுவினர் கலந்துக்கொண்டனர்.