கோலாலம்பூர், டிச. 24:

கேமரன்மலையை மீண்டும் வளமாக்குவோம் என்ற மாபெரும் திட்டத்தை வகுத்து, விவேகமாக சேவையாற்றிக் கொண்டிருக்கும் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியசின் சேவைகள் குறித்து அறிந்து கொள்ள நேருக்கு நேர் வரும்படி மைபிபிபி தேசியத் தகவல் பிரிவுத் தலைவர் சைமன் சுரேஷ் வருணமேகம் சவால் விடுத்தார்.

கேமரன்மலையில் மைபிபிபி கட்சி ஆற்றிவரும் சேவைகள் யாவும் தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துதான் நடைபெறுகின்றன என்பதை இவ்வேளையில் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக, கேமரன்மலையிலுள்ள ஓராங் அசால் சமூகத்தை வைத்து அரசியல் நடத்தும் ஜசெகவுக்கு இதனை வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

கேமரன்மலையில் வசிக்கும் பூர்வக்குடியினரை (ஓராங் அசால்) தேசிய முன்னணி அரசாங்கம் பகடைக்காயாகப் பயன்படுத்தி வருகிறது என ஜசெகவின் எம்.மனோகரன் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அள்ளிவீசியிருக்கிறார். இது தொடர்பாக கருத்துரைத்த சைமன் சுரேஷ் மேற்கண்டவாறு கூறினார்.

தேசிய முன்னணியைக் குறை கூறுவதற்கு முன்னர் நீங்கள் வட்டமடித்துக் கொண்டிருக்கும் ஜசெகவின் குறைபாடுகளைக் கண்டறியுங்கள். அதைவிடுத்து, கேமரன்மலையில் நிகழாத ஒன்றைச் சொல்லி, வாக்குகளை வசப்படுத்திக் கொள்ளும் திட்டத்தைக் கைவிடுங்கள்.

கேமரன்மலையில் உள்ள ஓராங் அசால் மக்களுக்குத் தேவையான உருமாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கூறிய டான்ஶ்ரீ கேவியஸ், அங்கு நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை, அந்தத் திட்டங்கள் குறித்து நீங்கள் அறிய வேண்டும் என்றால், தானா ராத்தாவிலுள்ள மைபிபிபி சேவை மையத்திற்கு வருகை தாருங்கள். சேவைகள் தொடர்பான விளக்கங்களைத் தருகிறோம்.

அதோடு, அண்மையில் தானா ராத்தாவில் தேசியத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம் திறப்பு விழா கண்டது. அங்கும் வந்து விளக்கம் கேட்கலாம். வெறுமனே, தேசிய முன்னணி இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்று புழுதிவாறி இறைக்க வேண்டாம். நிலவரத்தைக் கண்டறிந்து அதன் பின்னர் பேசலாமா கூடாதா என முடிவு செய்து கொள்ளுங்கள் எனவும் சைமன் சுரேஷ் வலியுறுத்தினார்.

தேசிய முன்னணிக்கு மாற்றாக பக்காத்தான் ஹாராப்பான் இருக்கிறது என்று சொல்வதற்கு முன்னர், சற்று யோசிக்க வேண்டும். வாக்குறுதிகளை வழங்குவதோடு சரி, அடுத்தக்கட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்கவே தயக்கம் காட்டும் பக்காத்தான் ஹராப்பான் எப்படி மக்களின் நம்பிக்கையைப் பெறும்.

நம்பிக்கை என்ற வார்த்தைக்கு தேசிய முன்னணி அரசாங்கமே சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. எனவே, இதுபோன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கேமரன்மலையில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். தேமு தலைவரும் பிரதமருமான டத்தோஶ்ரீ நஜிப் அவர்கள் ஒட்டு மொத்த மலேசியர்களுக்கான வருங்காலத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார். அவருடன் இணைந்து முழு மூச்சாக மைபிபிபி கட்சியும் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

இதற்குச் சான்றாக கேமரன்மலையில் வரிசை கட்டி நிற்கும் உருமாற்றத் திட்டங்கள் விளங்குகின்றன. கேமரன்மலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக களப்பணி ஆற்றிவரும் மைபிபிபி கட்சி தேசிய முன்னணியின் தோழமைக் கட்சி என்பதையும் இங்கு நினைவுப்படுத்த விரும்புவதாக சைமன் சுரேஷ் தெரிவித்தார்.