இன்றும் அணையாத ஒளி விளக்கு எம்.ஜி.ஆர்! – வரலாறுடன் நினைவுநாள்!

0
38

 

எம்.ஜி.ஆர்  என்ற  மனிதர்..

புரட்சி நடிகராக,

மக்கள் திலகமாக,

நடிக மன்னராக,

வசூல் சக்கரவர்த்தியாக,

மூன்றெழுத்து மந்திரமாக,

பொன்மனச் செம்மலாக,

மக்களின் இதயக்கனியாக,

ஏழைகளின் ஒளிவிளக்காக,

தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக,

மன்னாதி மன்னனாக…

வாழ்ந்து… மறைந்து… இன்றும் புவி போற்றிடும் புரட்சித் தலைவராக திகழ்கிறார். வாழ்க்கைச் சக்கரத்தில் படிப்படியாக தமது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்த ஒரே துருவ நட்சத்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கடவுள் முருகன் புகழ் பாட பாட நா மணக்கும். அது போல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். புகழ் எழுத எழுதவார்த்தை இனிக்கும். வாழும் காலத்தில் இவர் காணாத சவால்களும் இல்லை சறுக்கல்களும் இல்லை. மறைந்த காலத்தில் இவரைப் போல் சரித்திரம் படைத்தவர் யாருமில்லை என்று உலகமே இன்றும் வியந்து நிற்கிறது. வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் வாங்க வேண்டும் இவர போலயார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று அவர் பாடிய வரிகள் அவருக்கே மிக பொருத்தம்.  தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ் படங்களுக்கும்முக்கியதுவம் கொடுத்து அருங்காவியங்களைக் கொடுத்த இந்த காவியத் தலைவனின் 30-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஆண்டுகள் பல கடந்தாலும் எம்.ஜி.ஆர். என்ற மூன்றேழுத்து மக்களின் இதயத்தில் நீங்கா இடத்தைப் பெற்றிருக்கிறது. அன்னாரின் நினைவு நாளை முன்னிட்டு, அவரின் வரலாற்றுடன் அனேகன்.காம் இந்த சிறப்பு கட்டுரையைப் படைக்கிறது.

 

எம்.ஜி,ஆரின் குடும்பமும் ஆரம்ப காலமும் 

இலங்கை கண்டியில் ஜனவரி 17ஆம் தேதி 1917-ஆம் ஆண்டு உதயமானது ஒர் உதயசூரியன். இந்த உதயசூரியன் நாளை எத்தனை பேர் வாழ்வில் ஒளியாகும் என்று யாரும் அன்று நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நடந்தது என்னவோ அதான். இதுதாதன் எழுதபட்ட விதி என்பதோ. தந்தை கோபால மேனனுக்கும் தாயார் சத்தியபாமாவுக்கும் கடைகுட்டியாக பிறந்தவர் எம்.ஜி.ராமசந்திரன். இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் இரு மூத்த சகோதர்களும் இருந்தனர். எம்.ஜி.ஆருக்கு சிறுவயது இருக்கும் போதே தமது தந்தையை இழந்தார். கணவரின் இறப்புக்கு பின்னர் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் குடியேறினார் சத்தியபாமா. ஐந்து பிள்ளைகளை வளர்ப்பதற்கு கஷ்டமாக இருந்தாலும் அன்புடன் அவர்களைப் பேணி காத்துவந்தார். இந்நிலையில் எம்.ஜி.ஆரின் சகோதரி கமலாட்சி தமது 16வது வயதில் காலமானார்.

எம்.ஜி.ஆரின் தாயார் சத்தியபாமா

வறுமையின் கோரப்பிடியில் இருக்கும் குடும்பத்தை கரை சேர்க்கப் படிப்பைத் தொடர முடியாமல் உறவினர் ஒருவர் மூலம் நாடக கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த்தார் எம்.ஜி.ஆர். அங்கு வேலைகளைக் கற்றுகொண்டு இருந்த நேரத்தில் நாடகங்களில் சில காட்சிகளில் நடிக்க இவருக்கு சிறு சிறு வாய்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளை காற்றுள்ளபோதே தூற்றிக்கொண்டவர் எம்.ஜி.ஆர். சென்னிற மேனியில் சுருட்டை முடியுடன் நாடங்களில் வலம் வரத் தொடங்கிய இவரை யாரென்று கேட்கும் அளவிற்கு தமது நடிப்பாற்றலால் பிரபலமானார் எம்.ஜி.ஆர். இவர் நடித்த முதல் படம் சதிலீலாவதி. 1940ஆம் ஆண்டு எம்.கே தியாகராஜ பாகவதரின் தோழனாக ‘அசோக்குமார்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். ஒரு நடிகனுக்கு எல்லாத் திறமைகளும் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்ட எம்.ஜி.ஆர். வாள் சண்டை, கம்புச்சண்டை, குதிரைச் வாரி, நடனம் என்று சகல கலைகளையும்  கற்று திறமைகொண்ட நடிகராக உருவானார். கலையின் மீது இவர் கொண்ட தாகம் கலைவாணியின் ஆசியோடு இவரை பார் போற்றும் நடிகனாக்கியது. ராஜகுமாரி என்ற படத்தின் மூலம் கதாநாயகன் என்ற இடத்தைப் பிடித்தார் எம்.ஜி.ஆர். பின்னர் எம்.ஜி.ஆரும் வி.என் ஜானகியும் ‘மோகினி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். இந்த ஜோடி மீண்டும் “மருத நாட்டு இளவரசி”யில் நடித்து பிரபலமானது.

               நாடக கம்பெனியில் எம்.ஜி.ஆர்

 

திருமண வாழ்க்கை  

இந்த நிலையில் எம்.ஜி.ஆர். தமது 21வது வயதில் பார்கவி என்ற தங்கமணியை மணந்தார். இவர்களது இல்லற வாழ்க்கை அதிக நாள் நீடிக்கவில்லை. சொந்த ஊரான பாலகாட்டுக்கு சென்றிந்த போது தங்கமணி மாரடைப்பில் காலமானார். இது எம்.ஜி.ஆரின் வாழ்வில் மிகப்பெரிய இடியை இறக்கியது. பேருக்கு ஏற்ற மாதிரி தங்கமான மனைவியின் பிரிவு இவரை மிகவும் நோகடித்தது. இதனால் எம்.ஜி.ஆர். தனிமையில் வாழ்ந்தார்.

வி.என் ஜானகி மற்றும் சதானந்தவதியுடன் எம்.ஜி.ஆர்

சில காலங்களுக்கு பிறகு, இவரின்  நிலை கண்டு வேதனையுற்ற அம்மா சத்தியாமாவின் வற்புறுத்தலால் சதானந்தவதி என்ற பெண்ணை இரண்டாவது முறையாக திருமணம் செய்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். இவர்களது வாழ்க்கை ஆனந்தமாக அமைந்தது. இப்படியிருக்க விதி மீண்டும் எம்.ஜி.ஆரின் வாழ்வில் விளையாடியது. விதிவசத்தால் சதானந்தவதி தீரா நோயில் விழுகிறார். இந்த கால கட்டத்தில் இல்லற வாழ்க்கையே நமக்கு இனிமேல் இல்லை தான் உண்டு தன் தொழில் உண்டு உழைப்பே உயர்வு என்ற ஏணியில் ஏறிக்கொண்டு இருக்கும் போது ஒரு பெரிய சறுக்கல் அதாவது எம்.ஜி.ஆருக்கு மூன்றாவது கல்யாணம் நடக்க இயற்கை அழைக்கிறது. மக்கள் திலகத்தின் குணநலன்களை புரிந்துக்கொண்ட ஜானகி அவர் மீது காதல் கொள்கிறார். ஆனால், இதனை எம்.ஜி.ஆர். மறுக்கிறார். இந்த விஷயத்தில் மிக கவனமாக செயல்பட்டார். ஒரு பக்கம் தன் தாய், மறு பக்கம் தன் மனைவி, மேலும் மனைவி உயிருடன் இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணை காதலிப்பதோ, கல்யாணம் செய்து கொள்வதோ சட்டப்படி குற்றம் என்பதை எம்.ஜி.ஆர். அவர்கள் நன்கு அறிவார். அவர் நாடகம், சினிமா, குடும்ப வாழ்க்கையில் மிகவும் அனுபவம் பெற்றவர். எதையும் யோசிக்காமல் செய்யமாட்டார். அப்படிபட்ட இவருக்கு வி.என். ஜானகி விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டு விட்டது. மனைவி சதானந்தவதி சம்மதத்துடன் ஜானகியை மூன்றாம் துணைவியாக கரம் பிடிக்கிறார். எம்.ஜி.ஆருடன் மூன்று திரைப்படங்களில் நடித்த வி.என் ஜானகி அவரை மணந்த பிறகு திரைவாழ்க்கைவிட்டு விலகினார். துரதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.

                      எம்.ஜி.ஆரு,ம் வி.என் ஜானகியும்

 

எம்.ஜி.ஆர். திரையுலக சாதனைகள் 

சதிலீலாவதி திரைபடத்தின் மூலம் சினிமாவின் திரைவாசலை அடைந்த எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்கள் 136. எம்.ஜி.ஆர் நடித்து 100 நாட்களையும் மீறி வெற்றிக் கண்ட படங்கள் 86 படங்கள், வெள்ளிவிழா கண்டவை 12, இவர் இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படமும் என் அண்ணன் படமும் 300 நாட்கள் திரையரங்கம் கண்டன என்பது குறிபடதக்கவையாகும். கடைசி படம் மதுரை மீட்ட சுந்தர பாண்டியன். இவற்றில் 17 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அத்தனையும் வெற்றிப்படங்கள். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் மூலம் முதன் முதலில் வண்ணப் படத்தைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தென்னிந்தியாவில் ஜனாதிபதி விருதுபெற்ற முதல்  தமிழ்படம் எம்.ஜி.ஆர். நடித்த மலைக்கள்ளன். இவர் நடித்த படங்களில் தெலுங்கு மொழிகளிக்கு மாற்றம் கண்ட படங்கள் 60, இந்தி மொழிக்கு மாற்றம் கண்டவை 9 படங்கள் ஆகும். எம்.ஜிஆர். நடித்த அதிக படங்களை இயக்கிய பெருமை ப.நீலகண்டன் , எம்.ஏ திருமுகத்தையும் சாரும். அதிக படங்களை தயாரித்த நிறுவனம் தேவர் பிலிம்ஸ். அதிக படங்களுக்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதமும் மகாதேவனும் ஆவர். எம்.ஜி.ஆர் இவர் இயக்கிய படங்கள் மூன்று. நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகியவையாகும்,

இவரது நடிப்பில் வந்த படங்கள் நாடோடி மன்னன், அரசிளங்குமாரி , மந்திரிகுமாரி, பணத்தோட்டம் , தாயிக்கு பின் தாரம், பாசம், திருடாதே, அடிமைப்பெண் ,ஆனந்தஜோதி, மன்னாதி மன்னன், நம்நாடு, ஒளிவிளகு தாயைக் காத்த தனயன், அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், இப்படி எல்லாமே முத்தான படங்களாகஅமைந்தன. அன்றையக் காலகட்டத்தில் பானுமதி, டி.ஆர்.ராஜகுமாரி, சாவித்திரி, பத்மினி, செளகார்ஜானகி,சரோஜாதேவி,ஜெயலலிதா, கே.ஆர். விஜய, காஞ்சனா, லதா, மஞ்சுளா, லெட்சுமி என்று பெரும்பாலும் எல்லா நடிகைகளுடன் நடித்துவிட்டார் இவர்களில் ஜெயலலிதா 28 படங்களில் நாயகியாகவும், சரோஜா தேவி 26 படங்களில் நாயகியாகவும் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளனர்.

 

 

எம்.ஜி.ஆரின் திரையுலக வில்லன்கள் 

தமிழகத்தின் தியேட்டர்களில் அதிகம் திட்டு வாங்கியவர், சபிக்கப்பட்டவர் எம்.என். நம்பியாராகத்தான் இருக்கமுடியும். ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில் எம்.ஜி.ஆரை அவர் அடிக்கும்போது கதறியவர்கள், அந்த நேரத்தில் நம்பியார் கையில் கிடைத்தால் குதறியிருப்பார்கள். ‘நான் ஆணையிட்டால் என்று வாத்தியார் கிளம்பி நம்பியாரை அடிக்கும் போது ரசிகர்களுக்குள் உற்சாக ஊற்று. பழி உணர்வைத் தீர்த்துக் கொண்ட திருப்தி. திரையில் நம்பியாரின் அருமையான வில்லத்தனத்தாலே, நிஜத்தில் தனது ஹீரோயிஸத்தை வளர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். கருப்பு வெள்ளைக் காலத்தில் நம்பியாரோடு நடிக்காத நடிகர்கள் இல்லை. எப்போதுமே எம்.ஜி.ஆர். – நம்பியாரின் கூட்டணி என்றால் வசூல்மழைதான். பி.எஸ் வீரப்பா, எஸ் அசோகன் போன்றோரும் இந்த கூட்டணியில் சேர்ந்தவர்கள் தான்.

 

எம்.ஜி.ஆர் திரைபடப்பட வசனங்களும் & பாடல்களும்

சினிமாவில் லாபம் மட்டுமே நினைப்பவர்களுக்கு மத்தியில், தரமான சிந்தனைகளையும், ஒழுக்கம் தரும் பண்புகளையும் தமது படங்களின் கதாபாத்திரங்களின் மூலம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவ்ர் எம்.ஜி.ஆர். அநாகரீக வார்த்தைகளை பேசுதல். புகைபிடித்தல், குடிபழக்கம் போன்றவறை தமது படங்களில் முற்றார் தவிர்த்த இவர் நடிகர் என்பதையும் மீறி, சமுதாய பற்றாளராகவும் பரிணாமித்தார். எம்.ஜி.ஆர். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கருத்துக்களை வசனமாக இடம் பெற செய்வார். அவை மக்கள் மனதில் மிகவும் பிரபலமடைந்தன.

நாடோடி: படிக்கிறவங்க புத்திசாலியாகலாம் எல்லோரும் அறிவாளி ஆக முடியாது. அனுபவந்தான் அத தர முடியும்.

நம்நாடு: எனக்குள்ள மூலதனம் என்ன தெரியுமா? மக்களுடைய அன்பும், என்னுடைய நாணயமுந்தான். அதுக்கு என்றுமே மோசம் வராது.

தாயைக் காத்த தனயன்:பிள்ளைகளின் ஆசையை தீர்த்து வைக்கும் பெற்றோர்கள் இருந்து விட்டால் நாட்டில் தற்கொலை என்ற சொல்லுக்கு இடம் இருக்காது.

ஆயிரத்தில் ஒருவன்: யாரோட தாகமாக இருந்தாலும் தாகத்தை தீர்ப்பதுதான் தண்ணீரின் கடமை.

விவசாயி: நாம் பிறர் திருந்துவதற்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர கெடுவதற்கு காரணமாக இருக்கக் கூடாது.

கணவன்: சத்தியம் சில நேரம் தூங்கும். ஆனால் என்றுமே சாகாது.

சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. இப்படி, சினிமாவின் மூலம் எவ்வளவு கருத்துக்களையும் நல்ல விஷயங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியுமோ. அத்தனையயும் தமது திரைப்படங்களின் வழி கொண்டு போர் சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. அதே வேளையில் தமது திரைப்படங்களின் இடம் பெறும் பாடல்களும் குழந்தைகள், பெண்கள், உழைப்பாளிகள், பாட்டளிகள், இளைஞர்கள், பெரியோர்கள் என்று எல்லா தரப்பினருக்கும் நன்மையையும், தன்முனைப்பான விஷயங்களை எடுத்துணர்த்தும் வகையிலேயே எழுத செய்திருப்பார். தமது பாடல்களின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலம் தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது என்று நம்புகிறவர் எம்.ஜி.ஆர்..

வேட்டைக்காரன் – உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்

நாளை நமதே – நாளை நமதே இந்த நாளும் நமதே, தாய்வழி தங்கங்கள் எல்லாம் நேர்வழி  சென்றால் நாளை நமதே

நம்நாடு – அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கலாம்.

உலகம் சுற்றும் வாலிபன் – சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைக்க வாழ்ந்திடாதே.

திருடாதே – திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே..!

மன்னாதி மன்னன் : அச்சம் என்பது மடமயடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயாகம் காப்பது கடமையடா..

படகோட்டி : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தரக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்.

இப்படி எத்தனை எத்தனை பாடல்கள்.. எல்லாமே சமுதாய பற்றோடு மக்களுக்காக கொடுக்கப்பட்ட பாடல்கள். அன்று எழுதப்பட்ட இந்த கருத்தாழமிக்க பாடல்கள் இன்றைய நவீன காலத்திலும் நம் இதயங்களில் இளையோடுகிறது. சமுதாய பாடல்களைத் தவிர்த்து எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களை பற்றி சொன்னால் அது தித்திக்கும் தேன் போல் இருக்கும். அத்தனையும் முத்தான காதல் பாடல்கள். இந்த வெற்றிக்கெல்லாம் மிக முக்கியானவர்கள் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், வாலி, பாடகர்கள் டி.எம்.எஸ். செளந்தராஜன், பி.சுசீலா கூட்டணி. இந்த கூட்டணிக்காகவே எம்.ஜி.ஆர். படங்களின் பாடல்களை பார்க்க திரையரங்கம் சென்ற கூட்டம் உண்டு.

எம்.ஜி.ஆர். நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். கவிஞர் வாலி, பாபநாசம் சிவன், கலைஞர் கருணாநிதி, உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, அ.மருதகாசி, ஆலஙகுடி சோமு ஆகியோர் எம்.ஜி.ஆரின் பாடகளில் மூலம் மக்களைக் கவர்ந்தவர்களாவர்.

 

  

 

எம்.ஜி.ஆரின் அரசியல் சாசனங்கள்

“ஒரு நடினால் நாடாளா முடியுமா “?

“ஒரு நடிகனால் ஏன் நாடாள முடியாது”?

 

 

திரைப்படங்களில் தன்னை வளர்த்துக்கொண்டிருந்த காலம் கலைஞர் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த நட்பு அதிகரித்தது. எம்.ஜி.ஆர். ஆரம்ப நாட்களில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், நேதாஜி பக்தராகவும் இருந்தார். பின்னர் ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு நாட்களில் கலைஞர் கருணாநிதியுடன் கொண்ட நட்பால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பால் ஈர்க்கப்பட்டார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் 6 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் தலைவரான அண்ணா எம்.ஜி.ஆரை மிகவும் நேசித்தார். எம்.ஜி.ஆரும் அண்ணாவை தலைவனாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டார்.

கருணநிதியும் எம்.ஜி.ஆரும் திரைத்துறையிலும், அரசியலிலும் நண்பர்களாக இருந்தார்கள். அண்ணா மறைந்த பிறகு யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர். முதல்வர் பதவியை கருணாநிதியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முரசொலிமாறனை சமாதானப்படுத்தி, கருணாநிதியை முதல்வராக்கினார் எம்.ஜி.ஆர். இதற்கிடையில் கட்சியில் சில உட்பூசல்கள் எழுந்தன. தி.மு.கவின் பொருளாளராக இருந்ததால் கட்சியில் நிலவும் குறைபாடுகளைக் கண்டு, பொதுக்குழு கூட்டத்தில் கணக்கு கேட்டார் எம்.ஜி.ஆர். இந்த சம்பவம் தி.மு.கவிலிருந்து அவரை நீக்க காரணமாக இருந்தது. எம்.ஜி.ஆரை 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி தி.மு.கவிலிருந்து தற்காலிகமாக நீக்கினார்கள். இதுவே நட்புக்கும் கட்சிக்கும் மிகபெரிய பிளவையும் பிரளயத்தையும் ஏற்படுத்தியது. கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர். தி.மு.க கட்சியிலிருந்து 1972ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

 

             பெரியாருடன் எம்.ஜி.ஆர்
   திமுகவில் இருந்த போது எம்.ஜி.ஆர்
    அண்ணாவின் மறைவில் எம்.ஜி.ஆர்

அதன் பின் சுற்றுபயணம் மேற்கொண்டு மக்களின் ஆதரவை எம்.ஜி.ஆர் கணித்தார். நன்கு யோசித்தார். தமக்கு மக்களின் ஆதரவு இருப்பதைத் தெரிந்துக்கொண்டார். 1972-ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். அந்தப் பெயரே அண்ணாவை எத்தனை தூரம் எம்.ஜி.ஆர். நேசித்தார் என்று காட்டியது .அண்ணா திராவிட முன்றேற்றக் கழகத்தில் பொதுச் செயலாளர் பதவியில் 16 ஆண்டுகள் இருந்தார்.

 ஒரு நடிகனால் நாடாள முடியுமா? என்று கல்கண்டு நாளிதழில் எம்.ஜி.ஆர். குறித்து பல விமர்சனங்களும் கேள்விகளும், கட்டுரைகளும் வெளிவந்தன. ஆனால் அதே நாளிதழ் எம்.ஜி.ஆர். முதல்வர் ஆனதும் ஒரு நடிகனால் ஏன் நாடாள முடியாது? என்று எழுதியது. சந்தர்ப்பமும் சாதனையும் விமர்சனங்களுக்கு அப்பாரற்பட்டவை என்பதை உணர்ந்தவர் எம்.ஜி.ஆர். தமது செல்வாக்காலும் சொல்லாக்காலும் தம்மை மக்களிடத்தில் எளிமையாக இணைத்துக்கொண்டவர் எம்.ஜி.ஆர்.

இதனால் 1977, 1980, 1984 ஆகிய மூன்று ஆண்டுகள் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றிப்பெற்று தமிழக முதல் அமைச்சர் பதவியில் இருந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் விளங்கினார். இவை எல்லாம் இவரது வெற்றியின் உச்சம் என்றும் சொல்லலாம்.

 

                        அதிமுக உதயம்..
      பதவி பிரமாணம் செய்யும் எம்.ஜி.ஆர்
           தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர்

 முதல்வர் என்ற செருக்கும் பக்கட்டும் இல்லாத காரணத்தால் மக்கள் இவரைச் சுற்றி நின்றனர். ஏழைகளின் அறியணையாக இருந்த எம்.ஜி.ஆர். மக்களின் நிலையைக் கண்டு இலவச திட்டங்களை அதிகம் செயல்படுத்தினார். மக்களின் நலன் கருதி இத்திட்டங்கள் தொடங்கப்பட்டிருந்தாலும் தொலைநோக்குப் பார்வையோடு இல்லாத திட்டங்கள் என்றே அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்ப்படன. அன்று மக்களின் தேவையை இவர் பெரிதுபடுத்தியதால் சில மாக்களின் பேச்சுக்களை இவர் பொருட்படுத்தவில்லை.

தம் இளமைக் காலத்தில் பசிக்கொடுமை எப்படிப் பட்டது என்பதை முழுமையாக உணர்ந்து, துன்புற்ற அனுபவத்தை எப்பொழுதும் மறவாமல் நினைவில் கொண்டிருந்தார். புரட்சித்தலைவர். அவர் தமிழகத்தின் முதல் அமைச்சரானதும், தமிழ்நாட்டுப் பாலகர்கள் பசிக்கொடுமையால் அவதியுறக் கூடாது. சாப்பிட உணவு கிடைக்கவில்லை என்பதற்காக எந்தக் குழந்தையும் பள்ளிக்கு வாராமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் நிறைவேற்றாத முதலமைச்சர் சத்துணவு திட்டத்தை அமல்படுத்தினார்.  முதலமைச்சராக இருந்தபோது ஏழை மக்களின் பசிக்கொடுமையையும் வேலை இல்லாத திண்டாட்டத்தையும் போக்கிட தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். விவசாயிகளுக்கு வழங்கும் மின் கட்டணத்தைக் குறைத்து, கூட்டுறவு வங்கிகள் மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் கடனை விரிவுபடுத்தி, விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து சட்டம் நிறைவேற்றி வேளாண்மை உற்பத்தியை பெருக்கியவர். 

 

தொழில் கல்வி பெருகிட ‘அண்ணா பல்கலைக்கழகம்’, பள்ளிக் குழந்தைகள்   அனைவருக்கும் மதிய உணவு வழங்கும் சத்துணவுத் திட்டம், தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தனியாகத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மகளிருக்காக்க் கொடைக்கானலில் அன்னை தெரசா பல்கலைக்கழகம், தந்தை பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்த முறையை நடைமுறைப்படுத்தியது, ஆஸ்தான கவிஞராக கவியரசு கண்ணதாசனை நியமித்தது, போன்ற சாதனைகள் புரிந்து புகழின் உச்சியை எட்டியவர் எம்.ஜி.ஆர்.

நின்றால் ‘பொதுக்கூட்டம்’ நடந்தால் ‘ஊர்வலம்’ என்று பத்திரகைகளால் பாராட்டப் பெற்ற அவர் இந்தியாவின் தலை சிறந்த விருதான ‘பாரத ரத்னா’ விருது பெற்றவர். அவரின் நினைவாக சென்னையில் மெரினா கடற்கரையில் அவரது உடல் புதைக்கப்பட்ட இடம் அவரது நினைவிடமாகப் போற்றி பராமரிக்கப்பட்டு வருகின்றது.

1967 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். மருத்துவமனையில் மரணப்படுக்கையில் அவர் இருந்தபோதும், உறுதிகொண்ட உள்ளத்துணிவோடு போராடி மறுபிறவி பெற்றார். மறுபிறவி பெற்ற எம்.ஜி.ஆரால், இனி பேச முடியாது. திரைப்பட வசனங்களைப் பேசமுடியாது என்று, எதிர்முகாமினர் எக்காளமிட்டனர். இவற்றையெல்லாம் மீறி, நோயில் இருந்து மீண்டு, மக்கள் மகிளும் வண்ணம் வெற்றிப்படங்களைத் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் சாவில் இருந்து மீண்டு, தனது தளராத பயிற்சியால் பேசத்தொடங்கி, ‘காவல்காரன், ‘ரகசிய போலீஸ் 115′, குடியிருந்த கோயில்’, ‘ஒளிவிளக்கு’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்து எதிரிகளின் வாய்ச் சவடால் வாயிலை அடைத்தார்.

1983 – ஆம் ஆண்டு இறுதியில், சாதாரண நோய்க்காக சென்னை அப்போலோ மருந்துவமனைக்குச் சென்ற புரட்சித் தலைவர், கடுமையான நோய்க்கு உள்ளாகி, அமெரிக்காவில் உள்ள புருக்ளீன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எம்.ஜி.ஆர். உடல்நிலை பற்றிக் கொடூரமான வதந்திகள் பரப்பப்பட்டன. ‘அவர் திரும்பி வந்தால் அவரிடமே ஆட்சியை ஒப்படைக்கிறோம்! எனவே எங்களுக்கு வாங்களியுங்கள்!’ என்று எதிர்முகாமினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். மக்களின் ஏகோபித்த வழிபாடுகளால் அமெரிக்காவில் இருந்து, எம்.ஜி.ஆர். திரும்பி வருவதற்கு முன்பே 1984 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அவரது இயக்கம் 136 இடங்களைப் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியது. ஊர் ஊராக சென்று, தெரு தெருவாக வலம் வந்து, வீடு வீடா நின்று மைக் பிடித்து, சத்தம் போட்டு, மக்களை ஈர்க்கவும் அவர்களை ஓட்டுக்களை வாங்க ஓடியவர்கள் எங்கே? படுக்கையில் படுத்துக்கொண்டே கண் திறவாமல் மக்களின் நாடித்துடிப்பை மனதில் ஏற்றி காலத்தை வென்று வெற்றி கண்ட மக்கள் திலகம் எங்கே என்ற கேள்விகள் இன்றும் நம்மை அலசி பார்க்க வைக்கும்.

 

எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு….?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினராகவும், ராஜ்யசபா எம்.பி.யாகவும், கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராகவும் செல்வி.ஜெயலலிதா பொறுப்பேற்று கழக மற்றும் அரசுப் பணிகளில் எம்.ஜி.ஆருக்கு உற்ற துணையாக திகழ்ந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக 1984ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க சென்றிருந்த போது நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜெயலலிதா கழக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றியை நிர்ணயிக்கும் வண்ணம் கருணாநிதியின் கனவை பொடிப்பொடியாக்கி தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்து எம்.ஜி.ஆர் வெற்றிபெற்றார். 3வது முறையாக எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பொறுப்பேற்கும் சிறப்பிற்கு அடித்தளமாக இரவு பகல் பாராது கண் துங்காது உள்கட்சி – எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை துச்சமென மதித்து செயல்பட்டவர். கழகத்தின் வலிமையை உணர்த்தும் வண்ணம் எம்.ஜி.ஆர். 1986ம் நடைபெற்ற இரண்டு நாள் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில் செல்வி.ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்கு செங்கோல் வழங்கிடவும், அன்றே எம்.ஜி.ஆர். தனது அரசியல் வாரிசு ஜெயலலிதா தான் என்பதனையும் அந்த மாநாட்டின் மூலம் எம்.ஜி.ஆர். கழகத் தொண்டர்களுக்கும், லட்சோப லட்சம் மக்களுக்கும் அடையாளம் காட்டினார். அந்த மாநாட்டில் எம்.ஜி.ஆர். பேசும் போது குறிபபிட்டார், கருணாநிதி ஒரு தீய சக்தி. அந்த தீய சக்தியை தமிழகத்து அரசியலிலிருந்து விரட்ட வேண்டும் என்றார். அந்த மகத்தான மக்கள் தலைவர் 1987ம் ஆண்டு டிசம்பர் 25, அமரராகின்ற வரை கருணாநிதியால் ஆட்சி பொறுப்பை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்க்குப் பின்னால் இரண்டான கழகத்தை ஒன்றாக்கி முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டு, கழகத்தை ஒரே குடும்பமாக்கி கழகத்தை வழிநடத்தி 1991-ம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் செல்வி.ஜெயலலிதா தலைமையில் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் கழகம் அழிந்துவிடும். தான் மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிடலம் என்று கனவு கண்ட கருணாநிதி,ஜெயலலிதா கழகத்திற்கு தலைமை ஏற்று வழிநடத்துவடை பொறுக்காமல் அவரை ஒழித்தால்தான் தனக்கு அரசியல் வாழ்வு என்று தப்புக்கணக்கு போட்டு ஒரு சர்வாதிகாரியைப் போல முதலமைச்சர் என்ற அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி 1996ம் ஆண்டு இறுதியில் ஜெயலலிதாவை கைது செய்து 28 நாட்கள் சிறையிலடைத்து மகிழ்ந்தார். ஜெயலலிதா சிறையிலிருந்து வெளியே வந்து கழகத்தை மேலும் வலிமையுள்ளதக்கி கருணாநிதியை அவர்தம் அடக்குமுறையை தவிடு பொடியாக்கினார். கழகத்திற்கு தாயானார். இந்திய துணைக்கண்டம் உற்றுநோக்கும் முதல்வர் ஆனார்.

 

 

உதயசூரியனின் அஸ்தமனம் :

 

23ந்தேதி இரவில் ராமாவரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் எம்.ஜி.ஆர். படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். இரவு 12.30 “நெஞ்சு வலிக்கிறது” என்று கூறி தண்ணீர் வாங்கி குடித்ததும் மயக்கம் அடைந்தார். மருத்துவர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர்.

மீண்டும் இதயத்துடிப்பு வருவதற்கு உரிய சிகிச்சைகள் செய்தார்கள். ஆனால் சிகிச்சை பலன் அளிக்கவில்லை. அதிகாலை 3 மணிக்கு காலனின் மடியில் துயில் கொண்டார் மக்கள் திலகம். “திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால்  “எம்.ஜி.ஆர். மறைந்து விட்டார்” என்று டாக்டர்கள் அறிவித்தபோது அனைவரும் கண்ணீர் விட்டு அழுதார்கள். எம்.ஜி.ஆர். அருகிலேயே அழுதபடி இருந்த ஜானகி அம்மாள், மயக்கம் அடைந்தார். எம்.ஜி.ஆர். மறைவுச் செய்தியை அறிந்ததும், ஜெயலலிதா,  தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி உடனடியாக ராமாவரம் தோட்டத்துக்கு விரைந்தனர்.

அமைச்சர்கள், பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் மக்கள் திகலத்திற்கு இறுதி மரியாதை செலுத்த கண்ணீருடன் காத்திருந்தனர். ராமாவரம் தோட்டத்தில் இருந்து பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்த ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு போகப்பட்டது. அங்கு 6 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டு அதில் எம்.ஜி.ஆர். உடல் வைக்கப்பட்டது.

லட்சக்கணக்கான மக்கள் எம்.ஜி.ஆர். உடலைக் கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.  எம்.ஜி.ஆர். மரணம் அடைந்ததை அடுத்து நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் இடைக்கால முதல் அமைச்சராக பதவி ஏற்றார். எம்.ஜி.ஆரின் மறைவு அவரது மனைவி ஜானகி அம்மாளை வெகுவாகப் பாதித்தது.

“அண்ணா சமாதிக்கு தென்புறத்தில், எம்.ஜி.ஆர். உடலை சந்தனப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். இறுதி ஊர்வலம் ராணுவ மரியாதையுடன் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு உடல் அருகே அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தனர்.

ராஜாஜி மண்டபத்துக்கு வெளியே கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம். ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களில் பலர் அழுதபடி இருந்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.  பொதுமக்கள் விடிய விடிய எம்.ஜி.ஆர். உடலுக்கு மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு முழுவதும் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடைகள் மூடப்பட்டன. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சினிமா ஸ்டூடியோக்கள் மூடப்பட்டன.

எம்.ஜி.ஆர். மறைவையொட்டி தமிழ்நாட்டில் ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்பட்டது. அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. எம்.ஜி.ஆருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய அளவில் ஒரு நாள் துக்கம் அனுஷ்டிக்க உத்தரவிட்டது.

பிரதமர் ராஜீவ் காந்தி வெளியிட்ட அனுதாப செய்தியில் கூறியிருந்ததாவது:

 “மிகச்சிறந்த பாரதக் குடிமகனின் மரணத்துக்காக நாடு துக்கம் அனுசரிக்கிறது. எம்.ஜி.ஆர். சிறந்த தேசபக்தர். நாட்டுப்பற்று அவர் இதயத்தில் ஆழப்பதிந்து இருந்தது. இந்தியாவின் பாரம்பரியத்தில் அவர் பெருமிதம் கொண்டு இருந்தார். இந்தியாவின் ஒற்றுமையைப் புனிதமாகவும், ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதை புனிதமான கடமையாகவும் அவர் கருதினார்.இந்திய மக்களால் மட்டும் அல்லாமல் இலங்கை நாட்டு மக்களாலும் போற்றப்பட்டவர் எம்.ஜி.ஆர். அவரது மரணத்தில் என் சொந்த இழப்பு மிகப்பெரியது ஆகும். எம்.ஜி.ஆர். கடைசியாக கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சி, என் தாத்தா நேருவின் சிலை திறப்பு விழா ஆகும். அவரது முடிவுக்கு 36 மணி நேரத்துக்கு முன்பாக அந்த விழா நடந்தது. அப்போது என் குடும்பத்தின் 3 தலைமுறையினருடன் அவருக்கு உள்ள தொடர்பை எடுத்துக்கூறினார். இது அவரது விடைபெறு நிகழ்ச்சி என்று எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது” இவ்வாறு ராஜீவ் காந்தி கூறி இருந்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தி :

“ஆயிரம் கருத்து வேறுபாடுகளுக்கு இடையே நான் இதய பூர்வமாக நேசித்த என் ஆருயிர் நண்பர் தமிழக முதல் அமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் திடீர் மறைவு செய்தி கேட்டு அதிர்ந்து போய் இருக்கிறேன். 40 ஆண்டுகளுக்கு முன்பு அரும்பிய எங்கள் நட்பில் இடை இடையே எத்தனையோ சோதனைகள் குறுக்கிட்டபோதிலும் முதிர்ந்து கனிந்த எங்கள் நட்புணர்வு பட்டுப்போனதே இல்லை. என் சிந்தைக்கு இனிய நண்பர். செல்வாக்குமிக்க முதல்_அமைச்சர் குறுகிய காலத்தில் ஒரு கட்சியை உருவாக்கி அதனை ஆளும் கட்சியாக்கிய ஆற்றல் படைத்தவரின் இழப்பு கேட்டு இந்த நாடே துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறது. மாண்புமிகு முதல் அமைச்சரின் மறைவையொட்டி தி.மு.கழகத்தின் பொது நிகழ்ச்சிகள் இன்று முதல் ஒரு வார காலத்துக்கு ரத்து செய்யப்படுகின்றன”. இவ்வாறு கருணாநிதி கூறி இருந்தார்.

மறைந்த மக்கள் திலகம் வறுமைக் கோட்டில் அல்லல்பட்டு, துன்பத்தின் பிடியில் இன்னல்பட்டு, கலையில் உச்சாணம் அடைய அயார உழைக்கபட்டு, மக்களின் துயர் போக்க அரியணை ஏறபட்டு, அரசியல் சாசனத்தில் சரித்திரம் படைக்கப்பட்டு, ஈழமக்களின் விடுதலைக்கு பாடுபட்டு, மூன்றெழுத்து கொண்டு உலக மக்களால் ஈர்க்கபட்டு, புரட்சித் தலைவா என்று அழைக்கபட்டு, இறுதியில் யாருக்கும் சொல்லாமல் மூச்சைவிட்டு மக்களை தவிக்க விட்டுசென்றார் இந்த இதயதெய்வம். இன்று நம்மிடையே அவர் இல்லை என்றாலும், கசிந்துருகும் கண்களின் கண்ணீராய், பாடல்களின் பிம்பமாய், சொல்லிய சொல்லின் சித்தராய், அன்பின் புத்தராய், அவர் தெய்வமாக நினக்கும் மக்களின் உள்ளத்தில் என்றும் மங்காத ஒளிவிளக்காய் வாழ்ந்தும் கொண்டே இருக்கிறார்.. இருப்பார்..!