வேலைக்காரர்கள் நினைத்தால் இந்த சமுதாத்தையே மாற்றி அமைக்க முடியுமென்பதை அழுத்தமாக பதிவுச் செய்ய வேண்டுமென்ற முயற்சியே வேலைக்காரன். அந்த முயற்சியில் இயக்குநர் வென்றாரா? என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் வெற்றியை நிர்ணயிக்கின்றது.

தாம் வசிக்கும் குப்பத்து இளைஞர்களை கூலிப்படையில் இணைத்து, தமது வாழ்க்கையை நகர்த்தும் ரவுடி பிரகாஷ் ராஜ்ஜை எதிர்க்கும் கதாநாயகனாக சிவகார்த்திகேயனின் அறிமுகம் தொடங்குகின்றது. குப்பம் எப்.எம். என்ற வானொலியை தொடங்கி அதை பிரகாஷ் ராஜ்ஜூக்கு எதிராக திசை திருப்புகிறார் சிவா. அதை அறிந்து கொண்ட பிரகாஷ் ராஜ், மீண்டும் ஊர் மக்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, குப்பம் எப்.எம். இனி செயல்பட முடியாமல் தடுக்கிறார்.

அந்த சமயத்தில் குடும்ப சுமையை சுமக்க வேண்டுமென்ற கடப்பாடோடு, தமிழ்நாட்டின் முதன்மை உணவு தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனை முகவர் வேலையில் இணைகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் வேலை செய்து கொண்டே தமது குப்பத்து இளைஞர்களையும் தம்மை போல நல்வழிப்படுத்த நினைக்கும் சிவாவின் பயணத்தில் அவரது நண்பர் கொல்லப்படுகிறார்.

இதில் பின்னணியில் இருப்பது யார் என்பதை அறிய அவர் முற்படும்போதுதான் அந்த ரகசியம் வெளியே வருகின்றது. திரைக்கதையின் திருப்புமுனையே இங்குதான் தொடங்குகின்றது. நண்பனின் மரணத்திற்கு யார் காரணம்? அதன் பின்னணி என்ன? இப்படி திரைக்கதையில் பல திருப்பங்கள். இதை அனைத்தையும் அறிந்து தாம் முன்னெடுத்த முயற்சியில் வெற்றி பெற்றாரா? வேலைக்காரன் சிவா என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை!

சிவகார்த்திகேயன் நகைச்சுவை மட்டுமே தமது பலம் என்றிருந்தவர் நடிப்பிலும் அடுத்த கட்டத்தை தொட்டுவிட்டார். விஜய்க்கு இணையாக நடனத்திலும் அது அழகுதான். குப்பத்து இளைஞன் கதாபாத்திரத்தில் அம்சமாக பொருந்தியுள்ளார். நண்பன் மரணத்தில் கலங்குவது, தம் வீட்டிற்கே வந்து தேவையில்லாத பொருளை விற்கும் நபரை அமர வைத்து பேசும் போது, நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் விதம் பிரமாதம்.

இந்தத் திரைப்படத்தில் நயன்தாராவை தவிர வேறு யாரும் நடிக்கவே முடியாது எனும் கதாபாத்திரம் இந்த முறை வழங்கப்படவில்லை. வழக்கமான கதாநாயகிதான். குறிப்பாக தனி ஒருவன் திரைப்படத்தில் நம்மை இழுத்த காதல் காட்சிகளும் அந்த வசனங்களும் இதில் இல்லை.

ஃபஹத் ஃபாசில், அடக்கி வாசித்தே மிரட்டியிருக்கிறார். (நஸ்ரியாவின் கணவர்) அந்த ஒரு ஆச்சர்ய திருப்புமுனைக்கு பிறகு ஸ்கோர் பண்ண பெரிய விஷயமில்லாமல் பார்வை/ரியாக்ஷன்களிலேயே பின்னியெடுக்கிறார். தமிழ்சினிமா அரவணைக்கிறது உங்களை!

பிரகாஷ்ராஜ், சினேகா, சார்லி, ரோகினி, சதீஷ், ரோபோ சங்கர், ஆர்ஜே பாலாஜி, காளி வெங்கட், ராமதாஸ், மன்சூர் அலிகான், தம்பி ராமைய்யா, வினோதினி எனப் படத்தில் அத்தனை நட்சத்திரங்கள். ஆனால், பாக்யா விஜய் வசந்த் மட்டும் கவனிக்க வைக்கிறார்.

முதலாளிகளுக்கு தொழிலாளர்கள் விசுவாசமாக இருக்கலாம். ஆனால் அந்த விசுவாசம் தவறுக்கு துணைப் போகக்கூடாது என்பதை சொல்வதற்கு மெனகெட்டுள்ளார் இயக்குநர். உலகின் தலைசிறந்த சொல் ‘செயல். வேண்டாம்னு சொல்றதுக்கு காரணம் வேண்டும். வேண்டுமென்பதற்கு காரணம் தேவையில்லை. சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி நீ மாறாத, சூழ்நிலையே உனக்கு ஏற்ற மாதிரி மாத்து போன்ற வசனங்கள் படத்திற்கு பலம்.

தனி ஒருவன் பாணியிலிருந்து வேறுப்பட்டு கதை களத்தை ராஜா தேர்வு செய்திருந்தாலும், திரைக்கதையில் இன்னும் தனி ஒருவனின் தாக்கத்தை தவிர்க்க முடியவில்லை. தனி ஒருவன் திரைப்படத்தில் ஜெயம் ரவி முன்னெடுக்கும் நடவடிக்கைகளை முன்கூட்டியே அறிந்துக் கொண்டு அதை அரவிந்த்சாமி தடுப்பார். ஆனால் இதில் வில்லனை பக்கத்தில் வைத்துக் கொண்டே திட்டத்தை வகுக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஹிப் பாப் ஆதி ஏற்படுத்திய தாக்கத்தை அனிரூத் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக இசையைத் (இரைச்சல்) தவிர வேறு எதுவும் காதில் விழவில்லை. மாத்தி யோசிங்க அனிரூத்! ஒளிப்பதிவு, படத்தொகுப்பு அனைத்திலும் நேர்த்தி.

சொல்ல வந்த கருத்தை இறுதியில் சொல்லி முடிக்கிறார் ராஜா. ரிமேக் ராஜா என்று இனிமேல் அழைக்க முடியாதபடி கதைக்களம் அமைத்திருப்பது சிறப்பு. விற்பனை முகவர் வாழ்க்கையில் நாம் ஒருவரிடமிருந்து 10 ரூபாயை எடுக்கும் போது, மற்றொருவர் நம்மிடமிருந்து 20 ரூபாயை எடுக்கிறார். இதுதான் இன்று வரை தொடர்கிறது. என்ற அடிப்படை விவகாரத்தை அழுத்தமாக பதிவுச் செய்ததில் வேலைக்காரன் வென்று விட்டான். இருப்பினும்

தனி ஒருவன் இல்லை இந்த வேலைக்காரன்