கோலாலம்பூர், டிச. 27-
திருடன் என நினைத்து ஒருவரை தாக்கி மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இந்திய இளைஞர் உள்பட ஐவருக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீர்ப்பளிப்பத்தது.

பாதுகாவலர் எம்.யோகேஸ்வரன் (வயது 24), ராணுவ அதிகாரி முகமட் ஹைருல் அப்துல்லா (வயது 34), லோரன்ஸ் அனாக் மாசிங் (வயது 34) சொந்த தொழில் செய்யும் ஸைடி ஸைனால் (வயது 31), கண்காணிப்பாளர் சோங் காய் வெங் (வயது 31) ஆகிய ஐவரும் முகமட் யூசோப் அப்துல் காலிப் (வயது 26) என்பரை கடுமையாக தாக்கி மரணம் விளைவித்த குற்றத்திற்காக இந்த தண்டனையை நீதிமன்ற ஆணையர் முகமட் ஷாரிப் குற்றவியல் சட்டம் பிரிவு 302இல் கீழ் விதிப்பதாக அறிவித்தார்.

அந்த ஐவரும் கடந்த 2016ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி இரவு 8.30 மணி அளவில் செந்தூல், தாமான் இந்தான் பைடூரி, ஸ்நூக்கர் கிளப்பில் அந்த இளைஞரைக் கடுமையாகத் தாக்கி மரணம் விளைவித்ததாக கூறப்படுகிறது.

கடுமையான காயங்களுக்கு இலக்கான அந்நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு, அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர் திருட்டில் ஈடுபட்டிருந்தாலும் அவரை தாக்கிக் கொல்லும் அளவிற்கு யாருக்கும் உரிமை இல்லை. அவரை அமலாக்கத் தரப்பினரிடம் ஒப்படைத்திருக்க வேண்டுமென தனது தீர்ப்பில் நீதிமன்ற ஆணையர் முகமட் ஷாரிப் கூறினார்.